உயிர் போவது தான் உத்தேசம்

உயிர்களின் சிந்தனையெல்லாம்
மரணம் என்னை எப்போது கவ்வப்போகிறதோ
என்கிற அச்சத்தில்
இன்றுவரை !


நீண்ட வெய்யிலில் உணவுக்காய்
காத்திருந்து
உதிரமே காய்ந்து போன
தேசத்தின் உரிமைக்காரர்கள்
அடுத்த சாவு யாரின் பெயரில்
என யாரறிவார்?

நீர் கொண்ட இரு கரைகளிலும்
நீண்டுபோய்க் கிடந்த உறவுகள்,
மரணம்,
ஓயாமல் வேலை செய்தது
இமய தேசத்தை போல
தமிழனை பிணமாக்க !

பள்ளிக்கூடங்களில் படித்த படியே
பெரும் கனவுகளோடு
சுருங்கிப் போயின பசுஞ்சோலைகள்
கந்தகத் தகடுகளை அங்கங்களில் வாங்கி !


கடந்து போன நேற்றைய பொழுதில்
களவாடப்பட்ட எமது
உயிர்களைப் புதைக்க முன்னரே
இன்றைய விடியல்
அட
தமிழனின் சாவு போலவே
காலமும் விரைவாய்யோடுது
மாறி மாறி !


பெரும் கொடியாய் பிணைந்து வாழ்ந்த
பெருமினம் ,
கொடிய கயவனால்
உறவொன்று இடமொன்றாய்

படுக்க கூட நிலமின்றி வீதியோடு
அலையும்
பாவப்பட்ட நாய்போலத் தமிழன்.


அச்சத்தின் ஆக்கிரமிப்பில்
எப்படி வரும் நித்திரை ?
மூச்சு விடவே பயம்
முழு வாழ்வும் பயம் !


பாணுக்குப் போனவள்,
பள்ளிக்குப் போனவள்,
மாடு கட்டப் போனவள்,
தண்ணீர் அள்ளப் போனவள்
போனவர்கள் போனது தான் .
குளங்களிலும் ,மலக்குழிகளிலும்
என்றோ
ஒரு நாள் வருவார்களென
எதிர்பார்த்தபடி
ஓடுகிறது எங்கள் அவல வாழ்க்கை !


அப்படியிருந்தும்
அடங்குபவர்கள் நாமல்ல பகைக்கு தெரிவதில்லை,
அடிமைநாமன்று அடிக்கடி சொல்வதுண்டு,
எம் குடியழித்த பகைக்கு கொஞ்ச நாளுண்டு
பாடையேறும் பதவி வழங்க பருவமுண்டு !

இவர்கள் நீட்டும் துப்பாக்கி
எம்முணர்வை துருப்பிடிக்க செய்திடுமாம்,
அடப் பாவமே !
இவர்கள் உலகின் பெரும் மறதிக் காரர்கள்
எங்கள் கைகள் என்ன
எலி மருந்து செய்தனவா இதுவரை நாளும் ?

சதுப்பு நிலத்தில்
புதைக்காமலே விட்டு வந்தது
விழுந்த எறிகணையில்
உயிர் பிரிந்த
உறவுகளை மட்டுமல்ல,
எங்கள் வேட்கையையும் தான் . . .!


ஆயுதப் பலத்தின் ஆணவச் சேட்டைக்கு
அடங்காது கேள்!
இது விடுதலை புடம் போட்டு
வளர்த்த மண் !
உன் பண்பாட்டை எமக்குள் புகுத்தி
வழி மாற்றி விடுவதாய்
மகிழாதே,
உன் பண்பாட்டை ஏற்றுக் கொண்டோர்
எம்மவர் அல்லவே அல்ல,!
அவனையும் நம்பாதே
தமிழன் ஆங்கிலம் பேசினாலும்
சிந்தனை தமிழில் தான்,
சிலவேளை அவனும் அதிரலாம்
உன் உயிரைக் குடிக்கலாம் !


ஒன்றைக் கேள்
வந்தவனுக்கே வசதி தருகிறது
அந்த மண்ணெண்றால்-குலமாய்
வாழ்ந்தவனுக்கு சாவா தரும் . . .
மைந்தரைப் போல மண்ணும் பழகிவிட்டது
வரவேற்று வழித்து துடைக்கும்
போர் முறையை !

உனக்கிது தற்காலிக உல்லாசம்
உயிர் போவது தான் உத்தேசம் !

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (4-Sep-12, 9:58 pm)
பார்வை : 231

மேலே