எனக்கும் தமிழ் தெரியுமப்பா

தோல் நீக்கிய
அவித்த உருளைக்கிழங்கும்
நீளமான காய்ந்த ரொட்டியும்
கிண்ணத்தில்
வெங்காய சுடுசாறும்

பாரிஸில் அளிக்கப்பட
காலை உணவு...
சுற்றுலா வருவோருக்கு
அவர்கள் நாட்டு
பாராம்பரிய உணவுதான்
பரிசளிப்பார்களாம்
(உண்பதர்க்கு இல்லையோ?)

மேசைமீதிருந்த கத்தி கடப்பாரை
அத்தனை ஆயுதங்களுடன்
அந்த ரொட்டியும் நானும்
உண்ணும் களப்போராட்டம்
போதும் போதுமென்று...

வெட்டிய துண்டை
வெங்காய சுடுசாற்றில்
தொட்டு விழுங்கினால்....
(அந்த சுவையை எழுத
எந்த சுடுவார்த்தையும் இல்லை)

அடுத்த நாள்-
இட்டலி தோசையை
தேடி அலைந்து
சந்துக்குள்ளிருந்த
சிறு சிற்றுண்டிக் கடையில்
பத்துபேர் கூடினோம்
(இன்றுபோல் அன்று அங்கே
தமிழ்க்கடவுள் பவன்களும்
இட்லி கடைகளும் இல்லை)

அங்கே பரிமாறும்
அந்நாட்டு பணியாள்
அவரே முதலாளி?
அவரே தொழிலாளி?

“டு இட்லி ஒன் வடை”
ஆங்கிலத்தில்
சொல்லி அமர்ந்தோம்

இட்லி வந்தன உடனே
ஜில்லென்று
குளிரில் நடுங்கிக்கொண்டு....
சுவையோ சொல்வதற்கில்லை
வடையோ வரவே இல்லை

பொறுமையிழந்த நண்பர்
பொங்கிவிட்டார்...
இட்லியே இப்படியென்றால்
வடை எப்படியோ?
வாப்பா போகலாம்

அசரியுடன் வந்தார்
தொழிலாளி முதலாளி
சமையல் அறையிலிருந்து....

“பொறுங்.......கப்பா
சுட சுட வருது
உளுந்து வடையப்பா”

பிரஞ்ச் தமிழில்...

ஆச்சரியத்தில்
அவர்மீது எங்கள் பார்வை

“எனக்கும் தமிழ் தெரியுமப்பா
பாண்டிச்சேரியில் இருந்தேனப்பா
மூன்று வருடமாப்பா”

எங்கள் தமிழ் பற்றை
காட்டிக்கொண்டோம்
இன்னும் ஒரு தட்டு
இட்லி வடை கேட்டு.

(நாட்டில் நடக்கும்
மதவெறி கொடுமைகளும்
அரசியல் சூழ்ச்சிகளும்
நினைத்துப்பார்த்தால்……
நெஞ்சு பொறுக்கவில்லை
அதுதான் காரசாரமாக
இட்லி சாப்பிட போனேன்)

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (14-Sep-12, 4:17 pm)
பார்வை : 115

மேலே