27.ஆதலினால் காதலித்தேன்..! பொள்ளாச்சி அபி

நீ தொட்டால்
மொட்டுக்கள்
மலரும்பொழுது
நம் காதல்
மலராதா என்ன?
------ நிலா சூரியன் -----------

பிரேமாவிடமிருந்து,ஆட்சேபணையை உணர்த்தும் முகக்குறிகள் எதுவும் நான் பார்க்கவில்லை.அது ஒருவகையில் நிம்மதியாயிருந்தது. ஆனால், அங்கீகரித்ததிற்கான அடையாளமும் காணப்படவில்லை.

எதுவும் சொல்லி மற்றவர்முன் என்னை அவமானப் படுத்த வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் கூட,எந்த எதிர்வினையும் காட்டாமல் பிரேமா சென்றிருக்கலாமோ..? எனக்கு மீண்டும் குழப்பமாயிருந்தது.மிக இயல்பாய் ஆண்பெண் வித்தியாசமின்றிப் பழகினாலே இந்தப் பசங்கள் காதலிப்பதற்காக அவசரம் காட்டுகிறார்களே.! என்று பிரேமா எண்ணமிட்டால்..., சே.. அவசரப்பட்டதால் நட்பு என்ற நிலையையும் இழந்துவிடுவோமோ.?. எனக்கு மிகவும் மண்டை காய்ந்தது.அப்படி மட்டும் அந்தப் பெண் நினைப்பதாயிருந்தால், இனி ஆண் பெண் பேதமின்றிப் பழகும் போக்கு,இந்தக் கம்பெனியில் மட்டுமல்ல,இதுகுறித்து கேள்விப்படும் இடங்களிலெல்லாமே கெட்டுவிடுமே..அடக்கஷ்டமே.. பெரிய முட்டாள்தனத்தைச் செய்துவிட்டோமோ..!

நான் பணியாற்றிக் கொண்டிருந்த இயந்திரத்தின் வேகத்திற்கு,என் மனமும் சுழன்றது.அப்போதுதான் எனக்கு திடுமென்று மற்றொரு எண்ணமும் தலைதூக்கி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஸ்தம்பித்தேன்.தானாகவே இயந்திரத்தை நிறுத்திவிட்டேன். ‘கம்பெனியில் அவ்வப்போது ஏற்படும் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வை எட்டும் முடிவுக்கான விவாதங்களும் நின்றுபோய் விடுமோ..?’ அவ்வாறு நிகழ்ந்துவிட்டால்,அதைவிட துன்பம் அளிக்கும் விஷயம் வேறொன்றில்லை. இதை நினைக்கும்போது எனக்கு இருப்பு கொள்ள வில்லை.சற்றுநேரம் வெளியே நின்றுவிட்டு வந்தால் நன்றாயிருக்குமென தோன்றியது. கைகைளைத் துடைத்துக்கொண்டு, வெளியே வந்தேன்.வழக்கமாய் உட்காரும் திட்டில் அமர்ந்து கொண்டேன்.வேப்பமரத்தின் நிழலைக் கடந்துவந்த காற்று இதமாயிருந்தது.

நல்லது,கெட்டது,சாதகம்,பாதகம் எல்லாவற்றை யும் முன்னமே யோசித்தாயிற்று.நினைத்தபடி செயலிலும் இறங்கியாயிற்று.இனி பிரேமாவின் முடிவுக்காக காத்திருக்கும் நிலையில் கவலைப் பட்டு ஆகப் போவதென்ன.?

தவறு என முடியும்பட்சத்தில்,மிகத் தெளிவாக, என்னால் நிகழ்ந்த தவறுக்கு வெளிப்படையான வார்த்தைகளால் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும்.அதில் தவறு இருக்காது.ஆனால்,ஒரு சிறுவிபத்துபோல பாவித்து இந்த நினைவுகளைக் கடந்துவிடவேண்டும் என்றும்,இதனால் தொழிலாளர்களுக்கான நலன்களை முன்னிறுத்தும் இடத்தில் வெறுப்புக் காட்டிவிடக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்துவிட வேண்டியதுதான்.! வேறு வழியில்லை..!

இப்போது மனம் லேசாக மாறிப்போனது.மீண்டும் வந்து வழக்கமான எனது பணியைத் துவங்கினேன்.

மர்மம் நிறைந்த மணித்துளிகள் கடந்து மாலை மணி ஐந்தும் ஆனது.அன்று ‘ஓவர்டைம்’ இல்லாததால் பெண்கள் பிரிவிலிருந்து அனைவரும் ஒவ்வொருவராகக் கிளம்பினர்.பிரேமாவும்தான்..,எதிர்வினை என்னவாக இருக்கும் என்ற ஆவலில்,வெளியே வந்த பிரேமாவின் முகத்தில் ஒரு சிறு புன்னகை. போய் வருகிறேன் என்று தெரிவிக்கும் ஒரு விழியசைப்பு.! அப்பாடா..! எந்த எரிமலையும் சீறிவிடவில்லை.புயல் வந்து எதனையும் கவிழ்த்துவிடவுமில்லை.

வெளியே தெரிந்த மாலைநேரத்து நீண்ட நிழல்கள், யாரும் வரைய முடியாத சித்திரமாய் அழகு காட்டி நின்றது.மரங்களின் மெதுவான அசைவுகள், வாழ்த்து சொல்வது போலவும் இருந்தது. ‘காலங்களில் அவள் வசந்தம்..கலைகளிலே அவள் ஓவியம்..’மனதிற்குள் கும்மாளமிட்டபடி பாடல் ஓடிக்கொண்டிருந்தது.

மறுநாள் காலை கம்பெனியில் பணிநேரம் துவங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு,ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்த பிரேமா,இதில் உங்களுக்கு மட்டுமேயான விஷயம் ஒன்று இருக்கிறது.அதனால் பத்திரம்; என்று கொடுத்த போது,அதனை வாங்கி சட்டைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டேன்.உடன் வந்த யாரும் ஒரு புத்தகம் கைமாறுவது குறித்து எவ்வித சந்தேகமும் எழுப்பவில்லை. காரணம், அங்கு இருக்கும் எல்லோரும் எப்போதும் ஏதோ ஒரு புத்தகத்தோடு தொடர்ச்சியாகவோ, இடை வெளிவிட்டோ தொடர்பில் இருந்து கொண்டே இருந்தனர்.

பின்னர்,தேநீர் சாப்பிடும்போது,கிடைத்த இடைவெளியில் அந்தப்புத்தகத்தின் பக்கங்களை வெகுவேகமாகப் புரட்டினேன்.எனது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை.அதில் ஒருபக்க வெள்ளைத் தாளில்,சுருக்கமாய் நான்கு வரிகள். ‘நாளை எனது பிறந்த நாள்.தாங்கள் அவசியம் எனது வீட்டிற்கு மாலையில் வரவேண்டும்.முருகேசுக்கு ஏற்கனவே என் வீடு தெரியும்.மறக்க வேண்டாம்’
அவ்வளவுதான்.கடிதத்தில் வேறு ஏதேனும் நிறைய இருக்கும்..,என்ற என் எதிர்பார்ப்பு அர்த்தமில்லா- -மல் போயிற்று.

சரி..,காதல் குறித்து ஏதேனும் தெரிவிப்பதற்காக வரச்சொல்லியிருக்கலாம் என்று அடுத்த எதிர்பார்ப்பு வரிசைக்கு வந்தது. அதற்காகவெனில், முருகேசனுடன் வீட்டிற்கு வரவழைத்தா பேசவேண்டும்.?. சரி..,இப்போது எதுவும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.போய்த்தான் பார்ப்போமே..!

அடுத்தநாள்.பிரேமா சொந்தவிடுமுறை எடுத்துக்கொண்டதாகத் தெரிந்தது. பிறந்த நாளுக்காகவெல்லாம் விடுமுறை எடுப்பார்களா.? எனக்கு அது புதிதாய் இருந்தது.ஏனெனில் எனக்கு அறிவு தெரிந்தவரை எனது பிறந்தநாள் என்ற ஒன்று கொண்டாடப்பட்டதாக நினைவேயில்லை. காரணம்,எங்கள் குடும்பத்தில் பிறந்தநாள் என்ற விஷயம் ஒரு பொருட்டேயில்லாமல் இருந்தது. அதனைக் கொண்டாடும் அளவு வசதியுமில்லை. அவ்வாறு கொண்டாடுவதெனில்,நான்கு குழந்தைகளான எங்களுக்கும்,தாய்,தந்தை என இருவருக்குமாக,ஒரு வருடத்தில் ஆறுபேருக்கு பிறந்தநாள் கொண்டாட வேண்டியதிருக்கும்.. .., அதற்கான வாய்ப்பேயில்லாத நிலையில்தான் எங்களின் வாழ்க்கைச் சக்கரம் உருண்டு கொண்டிருந்தது.சுருக்கமாச் சொல்லப் போனால், எனது பிறந்தநாள் என்றைக்கு என எனக்கும் அப்போது தெரியாது.

ஆனால்,பிரேமாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் எப்போதும் அவர்கள் வீட்டில் விமரிசையாக நடக்கும் ஒரு விஷயம் என்பது,அவர்கள் வீட்டிற்கு செல்லும் வரை நானும் அறிந்திருக்கவில்லை. அங்கு சென்றவுடன் எனக்கு வெகுவாக ஆச்சரியம் தொற்றிக் கொண்டது. பிரேமாவின் அண்ணன், அவருடைய நண்பர்கள்,பிரேமாவின் வகுப்புத் தோழர்களாக இருந்து,இன்றுவரை நீடித்துவரும் நண்பர்கள்.மற்றும் நாங்கள் பணியாற்றும் கம்பெனியில் உள்ள சில குறிப்பிட்ட தோழர் தோழியர்கள் என,பிரேமாவின் வீடே கலகத்துக் கொண்டிருந்தது.நான் வெளியிலிருந்து பார்த்தபோதே மிரட்சியடைந்தேன்.எனது உடைகள் கூட அந்த இடத்திற்குப் பொருத்தமில்லையோ என்றொரு நினைவு வந்து இடையில் என்னைக் குறுக்கியது.பிறந்த நாள் விழாவிற்கென நானும் முருகேசனும் இணைந்து வாங்கிச் சென்றிருந்த பரிசுப் பொருள் வேறு,இப்போது மிகச்சிறியதாகவும், எடையே இல்லாததாகவும் லேசாகிப்போனது.
அடக் கஷ்டமே..நம்மை மதித்து ஒருவர் அழைத்திருக்கும்போது,போகும் இடம் குறித்து அறிந்துகொண்டு,அதற்குரிய தகுதியுடன் செல்லவேணடும் என்ற அறிவு உனக்கில்லை..? எனக்குள்ளிருந்து,எவனோ ஒருவன் என்னைக் கன்னத்தில் அறைந்து,துச்சமாயப் பார்த்து கேள்வி கேட்டுக் கொண்டிருப்பது வேறு அவமானமாய் உணரவைத்தது.

எட்டுவைத்த எனது கால்களில் எடைகூடியதுபோல மிகுந்த தயக்கத்துடன்,ஏதோ பலிபீடத்திற்குச் செல்லும் ஆட்டுக்குட்டிபோல நடந்து கொண்டிருந்தேன். அப்போதுதான் உள்ளிருந்து எதேச்சையாய் எட்டிப்பார்த்த ஒருவர்,வாங்க வாங்க..என்று கைகுவித்தபடி மிக சப்தமாய் வரவேற்றார்.எல்லோர் பார்வையும் எங்கள் மீதே குவிந்தது.அவருடைய சப்தம் கேட்டு,எட்டிப் பார்த்த பிரேமா “வாங்க..வாங்க..எங்கே இதுவரையும் காணோமே என்று நினைத்திருந்தேன்..” என்றபடியே வந்து எதிர்கொண்டபோது, அதுவரை, அந்தச் சூழ்நிலைக்கு ஒட்டாமலிருந்த மனம் சற்று இயல்புக்கு வந்தது.

எங்களை வரவேற்றவர்தான் தனது தந்தை என்றும்,உள்ளேயிருந்து வந்த தாயையும், பிரேமாவின் அண்ணன் மற்றும் அவருடைய நண்பர்கள்,பிரேமாவின் நண்பர்கள் என எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைக்கும் படலம் சற்றுநேரம் நீடித்தது. ஆனால்,அவ்வாறு அறிமுகப் படுத்தும் போதெல்லாம்,நான் ஏற்கனவே சொன்னேனே..எங்கள் கம்பெனியிலிருந்து வருவார் என..அவர்தான் இவர்.என்று சொல்ல..

அப்படியென்னதான் ஏற்கனவே சொல்லியிருக்கக் கூடும்.எனது மனதிற்குள் கேள்வி முளைத்து சற்று நேரம் இம்சித்தது.கடைசியில் பிரேமாவின் வகுப்புத்தோழர் ஒருவரிடமிருந்தே அதற்கான விடையும் கிடைத்தது. “ஓ..நல்லாப் பாடுவாருன்னு சொன்னியே..அந்தப் புலவரா..? சின்ன வயசா இருக்காரு..?”..குபீரென எனக்கு சிரிப்பு வெடித்தது.

பின்னர்,கேக் வெட்டி விழா கொண்டாடுவதற்கான தயாரிப்புகள் வெகுவேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.முருகேசன் வெகு சுலபமாய் அங்கிருந்தவர்களோடு இணைந்து கொண்டு, அவர்களுக்கு உதவியாய் பணிகளைச் செய்து கொண்டிருந்தான்.

எனக்குத்தான் சற்று சிரமமாய் இருந்தது.அவர்கள் எல்லோருமே ஏதோ ஒருவகையில் என்னைவிட, உயர்ந்தவர்களாகவே இருந்தனர்.தெரிந்தோ, தெரியாமலோ இங்கு வந்தாயிற்று.இனி சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிடவும் முடியாது. ஆனால், இவர்களின் அளவிற்கு ஏதேனுமொரு வகையில் வித்தியாசமாக என்னையும் உயர்த்திக் கொள்ள வேண்டிய சிக்கல் எனக்கு முன்னால் இருப்பதைப் போலவும் இருந்தது.என்ன செய்வது..? என்ன செய்வது..?.

சட்டைப்பையிலிருந்த வெள்ளைத்தாள் ஒன்றை எடுத்துக் கொண்டேன்.கூட்டத்திலிருந்து சற்றே விலகிக் கிடந்த இருக்கையொன்றில் அமர்ந்து கொண்டு,ஏதேனும் எழுதி கவிதையாய் வாசித்து விட்டுச் சென்றுவிடவேண்டும் என்று முடிவு செய்தேன்.ஆனால்,அங்கு இருந்த பரபரப்பில், நினைவை ஒருங்கிணைக்க முடியாமல் மனம் தவித்தது.

"என்ன புலவரே..இங்கவந்தும் பாட்டு எழுதத் தொடங்கிட்டீங்க போலிருக்கு...",அந்த நண்பரேதான். எனக்கு அந்த சமயத்தில் அவர் நல்ல யோசனை சொன்னதுபோலத்தான் இருந்தது. கவிதையாய் ஏதேனும் யோசிப்பதைவிட,ஒரு பாடலின் ராகத்தைப் பின்தொடர்ந்து எழுதுவது மிகச்சுலபம்.மேலும் கவனச்சிதறலும் இல்லாமல் அது காப்பாற்றும்.மிகச் சரி..அதையே செய்வோம்.. என்று முடிவெடுத்துக் கொண்டேன்.அப்போது மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த கயாமத் சே கயாமத் என்ற இந்திப்படத்தில் வரும் ஹே மேரி..என்ற பாடலையே எனக்கான பாடலாய்த் தேர்வு செய்தேன்.கைகள் வேகமாய் காகிதத்தில் நகர்ந்தது.

ஆதலினால் காதலித்தேன்..! மீண்டும் தொடர்கிறேன்.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (2-Oct-12, 10:11 pm)
சேர்த்தது : பொள்ளாச்சி அபி
பார்வை : 212

மேலே