நீ சாஸ்வதமானவன்!

இறைவா!

உன்னை
எத்தனை முறை
ஏசியிருப்பேன் நான்?

அத்தனைக்கும் என்னை
அணுவளவும்
அவதிக்குள்ளாக்கியதில்லையே நீ!

ஏன்?

நான்
திட்டியது கூட
தித்தித்ததா உனக்கு?

முகத்தில்
எச்சில் துப்பும் குழந்தையைக் கூட
அள்ளி அணைத்து
ஆனந்திக்கும்
அன்னையைப் போல...

வாசம் துப்பும்
மலரைக் கூட
மறுதலிக்காமல்
தீண்டி விளையாடும்
தென்றலைப் போல....

நான்
திட்டியது கூட
தித்தித்ததா உனக்கு?

தூயவனே!
தீ
வைத்தவர்க்கும் சேர்த்தே
வெளிச்சம் வழங்கும்
தீபம் நீ!

சபரிமலை வாழும்
சாஸ்தாவே!

உன்னைத்
தூற்றியே பழக்கப்பட்ட
என் நாவுக்கு
இதோ
இப்போது
போற்றிப் பாடப்
பழக்கிக் கொண்டிருக்கிறேன்.

நான்
நாத்திகனாய் வாழ்ந்த
நாட்களை
நினைத்துப் பார்க்கிறேன்

ஆஹா!

அற்புதம்!
அதி அற்புதம்!

நான் தான்
புல்லின் நிழலில்
பாய்விரிக்க நினைத்த
பைத்தியக் காரன்....

விஷத்தைக் கடைந்து
அமிர்தம் பருக நினைத்த
அறிவிலி.....

பூவைப்
புறக்கணித்துவிட்டுச்
சருகிலே தேன் தேடிய
சழக்கன்....

வசந்தத்தை விற்று
கொப்பளிக்கும்
கோடையை வாங்கிய
கோமாளி....

இவ்வளவு தானா?
இவ்வளவு தானா என்னைப் பற்றி?

இல்லை.
இன்னும் இருக்கிறது.

மொழியின்
சொற்கள் அத்தனையும்
சுண்டிப்போகும்வரை
சொன்னாலும்
மிச்சமிருக்கும்-என்
முட்டாள்தனங்கள்!

ஆம்,
அது
இமயமலையைக் கடக்க
எறும்பு எத்தனிப்பது போல...

உணர்ந்துகொண்டேன்.
எவனுடைய
நாத்திக வாதமும்
நாயகனே!
உன்னைச் சாய்த்துவிட இயலாது!

தவளைகள் சத்தமிட்டுத்
தாமரை கருகிவிடாது....

கல்லெறிந்து
காற்று உடைந்துவிடாது...

நீ
சத்தியமானவன்
சாஸ்வதமானவன்!


----------ரௌத்திரன்

எழுதியவர் : ரௌத்திரன் (5-Oct-12, 11:20 am)
சேர்த்தது : ரௌத்திரன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 117

மேலே