கணவனின் ஒப்பாரி

மூன்றாம் மாதத்திலே நான்காம் நாளன்று
மாவிலைத் தோரணங்களும் மல்லிப் பூச்சரமும்
அழகாய் படர்ந்த மலர் மேடையில்
படபடப்புடன் நான் ஏறி வீற்றிருக்க!

ஆயிரம் கண்கள் என்மீது விழித்திடவே
என்கண் இமைக்காமல் உனைநான் பார்த்திடவே
பச்சைப் பட்டுடுத்தி வெட்கத்தில் தலைகுனிந்திடவே
என் வலப்புறமாய் வந்தமர்ந்தவளோ!

தாலி ஒன்று உனக்கணிய
பஞ்சணை மெத்தையில் என்னுடன் பகிர்ந்தவளோ!
திங்கள்கள் சில தள்ளிடவே
இருண்ட அறையில் உயிரொன்றை வளர்த்தவளோ!

மாதம் பத்தாவதற்குள் அவசரமாய் வந்தவனை
தன் குருதியால் குளிக்க வைத்தவளோ!
ஈன்ற வலியை மறந்திட்டு தன்சேயின்
அழுகுரலை ஆனந்தமாய் கேட்டு ரசித்தவளோ!

தன் குழந்தையின் பசியை விரட்டிடவே
தன் பசியை சற்றும் பொருட்படுத்தாதவளோ!
அவன் எடையை ஏற்றுவதற்கு
தன் எடையை குறைத்தவளோ!

மழலை மொழியை புரிந்திடவே
தானும் குழந்தையாய் மாறியவளோ!
அடிமேல் அடி வைத்து முன்னேறி
அவன் நடக்க கற்றுத் தந்தவளோ!

ஒட்டுண்ணியாய் வாழ்ந்தவனை கனவுகள் பலகண்டு
பள்ளிப் பேருந்தில் அனுப்பி வைத்தவளோ!
கூட்டிச் சென்ற பேருந்து திரும்பிவர
நாழிகை பல காத்துக்கிடந்தவளோ!

கண் விழித்து அவன் பயின்றிட
உறக்கம் கொள்ளாமல் ஊக்கப்படுத்தியவளோ!
பொதுத்தேர்வில் அவன் வெற்றிபெற தன்னுடல்
வருத்தி விரதங்கள் பல இருந்தவளோ!

அவனை மென்பொறியாளர் ஆகச் சொல்லி
தன் நகையை அடகு வைத்தவளோ!
பட்டம் பெற்று அவன் வரவே
கண்களில் நீர்மல்கி பெருமிதம் கொண்டவளோ!

வேலை ஒன்றில் அவன் அமர
ஊருக்கெல்லாம் தண்டோரா போட்டவளோ!
அம்சமான ஒருத்தியை அவன் விரும்ப
ஆனந்தமாய் மணம் முடித்து வைத்தவளோ!

கடல்கள் பலகடந்து கண்ணாடி மாளிகையில்
குடிகொண்டவனை நிமிடமும் நினைத்தவளோ!
வாரம் ஒருமுறை அவன் அழைக்க
தொலைபேசியுடன் சுற்றித் திரிந்தவளோ!

சுகமில்லா தேகத்தோடு பல கோயில்கள்
ஏறி இறங்கி அர்ச்சனை செய்தவளோ!
வருடங்கள் பலஆயினும் கண்ணில் தோன்றா
தன்மகனை பார்க்க ஏங்கித் தவித்தவளோ!

பண்டிகை காலத்திலே பலகாரம் பலசெய்து
அவனின் வருகையை எதிர்ப் பார்த்தவளோ!
சந்தோசதினத்திலும் அனாதையாய் அவள் உலாவ
என் தோள்களில் கண்ணீர் சிந்தியவளோ!

இன்றாவது தன் முகம் காண
ஓடோடி அவன் வந்திடுவான்
என்றதொரு எண்ணம் கொண்டு
என்னிடமும் சொல்லாமல் என்னைத்
தனிமையில் விட்டுச் சென்றவளோ!

மடிந்து ஒரு இரவும் கடந்திற்று
மடியில் தலை வைக்க அவனில்லை!
பிரிந்து சென்று பல வருடங்களாயிற்று
மகனாய்த் தன் கடமையாற்ற அவனில்லை!

உன் மென்பொறியாளனை, உயிர்
கொண்டு காண இயலாமல்
உடல் விட்டுச் சென்று
உயிராய் கண்டுக் கொண்டவளோ!

எழுதியவர் : சுமி (12-Oct-12, 10:15 pm)
Tanglish : kanavanin oppaari
பார்வை : 215

மேலே