குடிகாரன் பொண்டாட்டி - கே.எஸ்.கலை
அப்பேன் ஆத்தா தேடி பாத்து
கட்டி குடுத்த கல்யாணம்
குடிகார பாவியால
குட்டி செவரா போகுதிங்க !
பொம்பளையா பொறந்த பாவம்
பொறுத்துக்கிட்டு வாழ்றேன் நானும்
பொங்கி குதிச்சி எழும்பிப் புட்டா
பொசுங்கிப் போகும் குடும்ப மானம் !
பொழுது விடியும் நேரம் பாத்து
கொழுந்து காடு மலையேறி
பாடுபட்டு ஒழைக்குறேன் நான்
மூணு வேள சோத்துக்காக !
காயாரு வாங்கித் தர
வக்கில்லாத எம் புருசேன்
கா போத்த குடிக்க கூட
கையோங்கி அடிக்குறாங்க !
கொழுந்து காட்டு அட்ட
உறிஞ்சி குடிக்கும் ரெத்தம்
கட்டிக்கிட்ட குடிகாரேன்
உசுறெடுபான் நித்தம் !
ராணி மாதி வாழ நினச்சேன்
கூனி குறுகி வாழ்ந்து வாறேன்
சனியனோட ஆட்டத்தால
சளிச்சிப் போச்சி ஏ வாழ்க்க !
சாயங்கால நேரத்துல
சாயத் தண்ணி எனக்கு இல்ல
சாராயத்த குடிச்சிப் புட்டு
உசுரெடுத்து குடுப்பான் தொல்ல !
கொமரிப் புள்ள இருக்க வீடு
கூத்தடிப்பான் கூட்டாளியோட
கூப்புட்டு நிறுத்த சொன்னா
கூச்ச போட்டு கொந்தளிப்பா(ன்) !
அலுத்துப் போச்சி
வெறுத்துப் போச்சி
மொத்த வாழ்க்கயும்
சளிச்சிப் போச்சி !
கட்டிக்கிட்ட பாவத்துக்கு
பொத்திக்கிட்டு வாழுறேன் நா
புத்திக் கெட்ட புருசன
தட்டி கேக்க நாதி இல்ல !