யதார்த்தமாய் ஒரு வலி...
வெகு நேரமாக
மறைத்து மறைத்துப் பார்த்து
யாரேனும் -
எந்த ஆண்களேனும்
பார்த்துவிடுவார்களோ என்று
தயங்கித் தயங்கி
யாரும் பார்த்திராதவண்ணம்
அளவு தேடித் தேடி
என் மனைவிக்கு உள்ளாடை ஒன்று எடுத்தேன்…
நான்காக அதை மடித்து
கைக்குள் மறைத்துக் கொண்டு
கடையின் அடித்தளத்திலிருந்து
மேல் தளத்திற்கு கொண்டுவந்து
பணம் கொடுக்கப் போனேன்...
அந்த பணம் வாங்கும் ஆள்
அதை வெளியே எடுத்துப் பிரித்து
நான்கு புறமும் மேல் தூக்கி சுற்றிப் பார்த்து -
பிறகு 'ஓ இந்த அளவா; இத்தனை விலை' என்றார்!
எனக்குக் கூசத் தான் செய்தது
யாரையும் சுற்றியெல்லாம் பார்க்கவில்லை,
புரிதலை உள்ளாடையோடு சேர்த்து
பை'வரை நிறைத்துக் கொண்டு நடந்தேன் -
வளர்ச்சியின் மாற்றம் என்றாலும்;
யதார்த்தம் சற்று அதிகமாகவே வலிக்கிறது!!!
(எங்கோ படித்ததில் பிடித்த வலிஇது)
(நன்றி வித்யாசாகர்)