சவ்வு மிட்டாய் தாத்தா.

”பிப்பிரப்பிரப்பீ”என பம்பைக் குரலெடுத்து
பச்சிளம் குழந்தைகளை
பார்க்கத் தூண்டிடுவார்;
காந்தித் தாத்தா கண்ணாடி
காக்கி நிஜார் சட்டையில்
சாந்தப் புன்னகையில்
சதா சாலைகளைச் சுற்றிடுவார்.
கண்ணுக்கு அழகான
வண்ணக் கலவைகளால்
சவ்வு மிட்டாய் பொதியொன்று
செவ்வனே சுற்றி வைத்த
மூங்கில் கழியொன்று முகத்தோடு
சேர்த்து வைத்து
தாங்கித் தாங்கி நடந்திடுவார்
தங்கத் தமிழ் தாத்தா.

காற்சலங்கை தாளமிட
கட்டைவிரல் சுண்டிவிட
கட்டிப் போட்ட குச்சிப் பாவை
களினடனம் ஆடும்.
இட்டப் பட்ட போதெல்லாம்
ஆட்டம் போட வைத்து
சவ்வு மிட்டாய் தாத்தா
சவடாலாய் சென்றிடுவார்.

வானகத்தில் வட்டமிடும்
ஏரோப்ளேன் முதலாக
கானகத்தில் தீண்ட வரும்
பாம்பு பல்லி தேளும்
கணப் போதில் செய்திடுவார்
பணத்திற்க் கேற்றவாறு
கையை நீட்டச் சொல்லி அவர்
மிதி வண்டி லாரி
மயில் கரடி யானையையும்
கட்டிவிட்டுப் போவார்.
வையத்துப் பொருளெல்லாம்
கைமீதில் வைத்து
நீட்டி நீட்டி அவர் செய்யும்
தனிப் பாணி கண்டு
வீட்டில் உள்ள பெரியோர்
தம் வயது மறந்து போவார்.

கள்ளமிலா சிரிப்புடனே
கவியிவரைக் காண வரும்
குழந்தைகளின் கன்னத்தில்
கொசுறுக்கென ஒரு பிசிறு
இனிப்பதனை தடவிடுவார்.
இனி அவரை முன்னளின்
இயல்புடனே காண்பேணோ?

எழுதியவர் : தா.ஜோசப் ஜூலியஸ் (21-Nov-12, 1:48 pm)
பார்வை : 256

மேலே