டிசம்பர் 21, 2012 உலக அழிவு நாள் - தலைவர்கள் வாழ்த்து
மாயன் காலண்டரில் 21,டிசம்பர்,2012 அன்று உலகம் அழியும் என்று கணிக்கப்பட்டிருப்பதால் உலக தலைவர்கள் இன்றுமுதல் பழைய கசப்பான நிகழ்வுகளை மறந்து உலகம் அமைதியாக அழிவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால? அடிப்படையில் முடுக்கிவிட்டு, அறிக்கை விட்டால் எப்படி இருக்கும் என்ற கற்பனை. உண்மையாக ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒபாமா: அமெரிக்காவின் அனைத்து அணுகுண்டுகளையும் செயலிழக்கச்செய்து விட்டோம்.ஈரானுடனான 30 ஆண்டு பகைமை முடிவுக்கு வந்தது.இந்தியாவில் சில்லரை வணிகத்தினால் கிடைக்கும் லாபம் ஏழைகளின் கல்விக்காகச் செலவிடப்படும். குவாண்டனாமோ கைதிகள் விடுதலை செய்யப்பட்டு, இழப்பீட்டுடன் அமெரிக்க குடியுரிமையும் வழங்கப்படும். அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் அதிபர் சகோதரர் அஹமதி நிஜாத்துக்குப் பரிந்துரைக்கப்பகிறது.
நேதன்யஹு: பலஸ்தீன மக்களுக்கு நாங்கள் இழைத்த கொடுமைகளுக்குப் பகரமாக இஸ்ரேல் கலைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த பலஸ்தீனமாகச் செயல்படும். டெல் அவிவ் மக்களை காஸாவுக்கும் காஸாவிலிருப்பவர்களை டெல் அவிவுக்கும் பரஸ்பரம் இடம்பெயரச்செய்து ஹமாஸுடன் இணைந்து மத்திய கிழக்கில் முழு அமைதிக்குப் பாடுபடுவோம்.
சீன அதிபர் ஹூ ஜிண்டோ: அனைத்து பொருட்களின் காப்புரிமை மீறல்களும் ரத்துசெய்யப்பட்டு இதுவரை காப்பியடிக்கப்பட்டுள்ள பொருட்கள் ஒன்று வாங்கினால் அதேபொருள் மூன்று இலவசம். அருணாசலப்பிரதேசத்தில் ஊடுறுவியுள்ள சீன ராணுவ வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டு, சுதந்திர திபேத்தை புனர் நிர்மானம் செய்ய அனுப்பப்படுவார்கள். MADE IN CHINA என்பதை COPIED IN CHINA என்று மாற்றுவோம்.
மன்மோகன் சிங்: அமெரிக்கா திருந்திவிட்டதால் இனிமேல் அதனிடமிருந்து மறைமுக நெருக்குதல் இருக்காது என்பதால் சுதந்திரமாகச் செயல்படுவோம். மீதமுள்ள நாட்களில் பிரதமர் நாட்காலியில் முறையே முலாயம் சிங், சரத் பவார், லாலு பிரசாத், நரேந்திர மோடி, ஜெயலலிதா, கனிமொழி, அன்புமணி, ராகுல்காந்தி ஆகியோருக்கு தலா ஒருநாள் அமர வாய்ப்பளிக்கப்படும்.
கர்நாடக முதல்வர் ஷெட்டர்: காவிரி நீர் தடையின்றி தமிழகத்திற்கு அனுமதிக்கப்படும். காவிரி நீர் சம்பந்தப்பட்ட வழக்குகள் இருக்காது என்பதால் அனைத்து நீதிபதிகளுக்கும் பெங்களூருவில் ஓய்வு இல்லம் வழங்கப்படும். எடியூரப்பாவிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்து ஊழலற்ற ஆட்சி நடக்கும்.
கருணாநிதி: திராவிட கட்சிகள் அனைத்தும் கலைக்கப்பட்டதை வரவேற்கிறேன். தமிழினத்தங்கச்செல்வி ஜெயலலிதா அம்மையாரின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தின் தலைநகராக மதுரை மாற்றப்பட்டு ஸ்டாலினும் அழகிரியும் ஒருநாள்விட்டு ஒருநாள் முதல்வர்களாக இருப்பார்கள். வைகோவுக்கு ஈழத்துக்கான இந்திய தூதர் பதவி வழங்க பரிந்துரைக்கப்படும். சிறப்பு 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் காஞ்சி பெரியவருடன் தம்பி வீரமணியும் கலந்து கொண்டு சிறப்பிப்பார். ஜெயா,சன்,கலைஞர் தொலைக்காட்சிகள் இணைக்கப்பட்டு 'ஜெகசன்' என்ற பெயரில் தரமான நிகழ்ச்சிகள் வழங்கப்படும். கே டிவியில் உலகம் அழிவு தின சிறப்பு நிகழ்சிகள் அனைத்தையும் மாயா அண்ட் மாயாகாலண்டர் கம்பெனி வழங்கவுள்ளது.
ஜெயலலிதா : அன்பு சகோதரர் விஜயகாந்தின் கோரிக்கையை ஏற்று மின்வெட்டு ரத்து செய்யப்படுகிறது. நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு காலில் விழுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, அங்கு இலவச மருந்துகள் வழங்கப்படும்.
ராமதாஸ்: தம்பி திருமாவளவனின் காதல் திருமணத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்துகொண்டு சிறப்பிப்பர். வன்னியர் தலித் நல்லுறவு ஏற்பட காதல் திருமணங்களுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும். ஒருநாள் பிரதமர் அன்புமணிக்கு ஆனந்தக் கண்ணீருடன் பாராட்டுவிழா எடுக்கப்படும். பாண்டிச்சேரி முதல்வராக பொறுப்பேற்றுள்ள காடுவெட்டி குருவின் பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்வர்.
விஜய டி.ராஜேந்தர்: மினி சூப்பர் ஸ்டார் குறளரசன் மற்றும் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு இணைந்து தஞ்சைசினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் "காதல் கத்தரிக்கா" படத்தை உலகம் முழுவதும் மட்டுமின்றி நிலவிலும் திரையிடப்படும். லதிமுக தொடங்கியதுமுதல் உறுப்பினராக இருக்கும் 30 பேருக்கும் 'போடாபோடி' படத்தின் டிவிடி இலவசமாக வழங்கப்படும்.
கமலஹாசன் : பகுத்தறிவு பேசுபவன் என்பதால் விஸ்வரூபத்தை 23-12-2012 அன்று வெளியிட திட்டமிட்டுள்ளோம். இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இல்லை என்பதால் தேசிய லீக் சகோதரர்கள் வழங்கவுள்ள 10,000 அண்டா பிரியாணியை இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருநாட்டு சகோதரர்களுடனும் இணைந்து சாப்பிடுவேன்.
இராம.கோபாலன்: இஸ்லாமியர்களுடனான வெறுப்புணர்வு நீங்கும்வகையில் இந்து முன்னணியை அல்-இந்து முன்னணி என்று பெயர் மாற்றுவோம். வினாயகர் ஊர்வலத்தில் சிலைகளுக்குப் பதிலாக சட்டையில் பேட்ஜ் அணிந்து மவுன ஊர்வலமாகச் செல்வோம். பாபர் மசூதியை விரைந்து கட்டக்கோரி இஸ்லாமிய அமைப்புகளுடன் சேர்ந்து மத்திய அரசை வலியுறுத்துவோம்.
அமைச்சர் நாராயணசாமி : இன்னும் ஒரு வாரத்தில் உலகம் அழியவிருப்பதால் இன்னும் ஆறு நாட்களில் துவங்கவிருந்த கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதற்கட்ட செயல்பாடுகள் சகோதரர் தேசபக்தர் போராளி உதயகுமார அவர்களால் நிறுத்தி வைக்கப்படுகிறது. இத்தனை வருடங்கல்போராடிய தியாகிகளுக்கு அரசின் சார்பில் இழப்பீடுகளுடன் கூடிய தியாகிகள் பட்டம் வழங்கும் விழா விரைவில் நடக்கவுள்ளது
மின்சாரத்துறை : 21.12.2012 அன்று 18 மணி நேரம் மின்வெட்டு அமுலில் இருக்கும்.