மீண்டுமோர் ரணகளம் வேண்டுமா?-கே.எஸ்.கலை
மீண்டுமோர்
ரணகளம் காண
தூண்டுவார்
காண்கிறேன் இங்கே....
நெற்றிக் கண்
திறப்பினும்
குற்றம் குற்றமே !
இனத் துவேசம்...
மதத் துவேசம்...
சாதித் துவேசம்...
நிறத் துவேசம்...
இவையெல்லாம்
கருப் பொருளாய்க்
கொண்டு
கவி புனைவோருக்கு
கலங்கமாய்த் தெரிகிறதோ
கலையின் கோபம்....??????????
பட்டமும் பரிசும்,
பாராட்டுக் குறிப்பும்
மட்டுமே நோக்கம் - அந்த
பாவிகள் நெஞ்சம் அறியுமா
பாதித்த நெஞ்சின்
வீக்கம் ?
ஏன்...ஏன்....ஏன்....???
நீ தமிழ்ச் சாதி
நான் சிங்களச் சாதி
என்று தொடங்கிய
பிரிவினைவாதம் எரித்த
சுடுகாட்டில் இருந்து
ஒருத்தன் கத்தினால்
சாதி வேண்டாமென்று...
கத்திய சத்தத்தில்
சுருதி குறைவு
தாளம் பிறழ்வு
என்று சத்தமிடும்
சாமானியர்களே.....
சிந்திக்க தொடங்குங்கள்
கொஞ்ச நேரம்...
புத்தியில் தட்டும்
கத்திய சத்தத்தில்
கலந்திருக்கும்
ரத்தக் கொதிப்பு....
உறவுக்கு மதிப்பளித்து
ஊருக்கு தீ வைக்கும்
ஊன மனம் கொண்டவன்
நானில்லை....
சாதி எரித்த
சடலத்தின்
முன்னிருந்து
என் கருத்தில்
இருக்கும் பிழை
என்னவென்று
நீதி கேளுங்கள்....
மதி இருந்தால்
மதிப்பீர்கள்...
மதிக் கெட்டால்
மிதிப்பீர்கள்...
மதித்தாலும்
மிதித்தாலும்
மழுங்காது
என் புத்தி !
நான்
மன்னிப்புக் கேட்டு
மண்டியிட வரவில்லை....
வார்த்தை வெட்டிய
காயத்திற்கு
மருந்து போடத்தான்
வந்தேன் !
சிலேடை கவிதைகளும்
சில்லறைக் கருத்துக்களும்
சொல்லி - என்னைச்
சிதறடிக்க நினைக்கும்
அற்பக் கவிஞர்களே.....
சிந்தித்துப் பார்த்தால்
சில பல ரணத் துளிகள்
கன்னத்தை நனைக்கும் !
கலையின் கோபத்தில்
கலந்திருந்த விடத்தின்
முகவரி புரியும் !
இவன்
அடங்கிப் போனது
அறியாமையினாலா ?
இவனை
அடக்க நினைப்பது
அறியாமையினாலா ?
ஆற்றாமையின்
முகவரி
அறியாத பெரியோரே.....
இளகிய மனம்
எனக்குண்டு
இலக்கியச் சுவையும்
எனக்குண்டு !
இளையவன் எனது
இறுகிய மனதின்
கருகிய வாடை ஏனென்று...
ஊனக் கண்கொண்டுப்
பார்த்தால் தெரியாது...
ஞானக்கண் கொண்டுப்
பாருங்கள் பிழைக்காது !
மீண்டுமோர்
ரணகளம் வேண்டுமா?
வாருங்கள்........
ஆயிரம் காரணம்
ஆயிரம் உதாரணம்
சொல்லி விளக்குவேன்....
சோடைப் போகாமல்
பாடைக்கட்டும்
சாதி ஏன்
வேண்டாமென்று
தரமற்ற வார்த்தைகள்
சரமாக வந்த சங்கதி
என்னவென்று...!