சொக்குதே மனம்

கொஞ்சும் மதிமுகத்து மாதே - உன்னில்
கொண்டேனடி காதல் நானிப் போதே - நீ
துஞ்சும் இடையசைத்து
பஞ்சின் மெல்லடியெடுத்து
வாராய் என்முன் நேராய்!
*
நெஞ்சில் நிறைந்தஎந்தன் மானே - எந்த
நேரத்திலும் உன்னைஎண்ணி நானே - கரு
நீலவிழி மூடவில்லை
நெய்யன்னமும் தேடவில்லை
நினைந்தேன் உடல் மெலிந்தேன்!
*
செந்தமிழால் பண்ணிசைக்கும் குயிலோ - என்னைத்தேடிவந்து ஆடிநிற்கும் மயிலோ - வானச்
சந்(தி)ரமதி இந்திராணி
தண்ணெழிலாள் கலைவாணி
எவளோ உனக்கு நிகரோ!
*
இந்தநிலை என்றுமில்லை எனக்கு - இங்கு
ஈடுஇணை யாருமில்லை உனக்கு - அடி
சுந்தரியே உன்னழகு
சொக்குதடி என்மனத்தை
ஒளிர்வாய் தினம் மிளிர்வாய்
- விசு கருணாநிதி