கத்தி எடு !!

வன்முறையின் பிறப்பிடம் தேடுகிறேன்
வன்முறையாய் அறுத்து வீச!
முள்ளை முள்ளால் தானே
எடுக்க முடியும் !

இங்கே இறப்புகள் மட்டுமே
இறவாப் புகழோடு ...
வெட்டியும் சுட்டும்
வீழ்த்தப்படுவது நம்மில் பாதி என்ற
பிரக்ஞை இன்றி
வலது கையே இடது கையை
வக்கிரமாய்த் துண்டிக்கும் அநியாயம் !!...

பணத்தைத் தாண்டிய ஏதோ ஒன்றின்
பங்களிப்பில் நான் சந்தேகிக்கிறேன் !!
மரபணு செய்யும் மாயா ஜாலமோ?
காட்டுமிராண்டித்தனத்தின் எச்சமோ?
வீரத்தின் மேலான விபரீதப் புரிந்துணர்வோ?

எத்தனை மேதைகள்?எதனை மேடைகள்?
கத்தியதேல்லாம் காற்றில் கரைந்ததோ?
மதங்கள் கூறிய நன்னெறி யாவும்
வேதங்களோடு வெந்து போனதோ?

அன்பின் மீது அன்பின்றிப் போனோமோ ?
அடுத்தது நாமென்று அறியாமல் ஆனோமோ?
வன்முறை சாக்கடை நடுவிலிருக்க
வசந்தத்தை எப்படி வரவேற்பது?

மூக்கு பொத்தி நிற்பவன் மூளையற்றவன்!
வா ! முதுகு வளைத்து
சுத்தம் செய்ய முயற்சிப்போம்
இந்த நோய்தரும் சாக்கடையை..
சுத்தம் ஆகாவிடினும் ,
அசுத்தமாவது குறையும்!!...
அடுத்து வரும் தலைமுறையில்...

எழுதியவர் : (29-Dec-12, 5:18 pm)
பார்வை : 93

மேலே