ஓ...நாய்களே...ஓநாய்களே !

நான் வாழ விரும்புகிறேன் அம்மா !

உத்திரபிரதேசத்தில்
உதித்த பூவது - பெண் என்பதால்
உதிரம் உதிர்த்து
உதிர்ந்து போவதா ?

திசம்பர் 16 - ஆறு
ஓநாய்களின் பிடிகளால்
பிழியபட்டது அவளுயிர்,
பேருந்தின் பேரிரைச்சளுள்
அவ்விருபத்து மூன்று வயது
பூவுக்கு நடத்தது - உலகில்
யாருக்குமே நடக்க கூடாதது !

மேற்கண்ட சம்பவம்...
அரசியல் வாதிகளுக்கு
ஓர் வாய்க்கரிசி !
ஊடகங்களுக்கு
ஓர் பேரிறைச்சி !
மேலவர் மெல்வர் மெதுவாய் !
கீழவர் மேலதிக தகவல்களுக்கு
ஓடுவர் நாய்களாய் !

எனக்கு இன்றைய பாடுபொருள் !
உமக்கு இன்றைய வாசிப்பு !
வலியை அவளுக்கு வித்த
ஓநாய்களுக்கு அன்றைய தீனி !
வலி அனுபவித்த அவளுக்கு ?

ஓ...நாய்களே...ஓநாய்களே !

உம் குருதியின் நிறம்
சகமனிதனின் சிவப்பா ?
மலமொத்த மஞ்சளா ??
சாக்கடைகளின்
சங்கமம் - உம் இதயமோ ?

பூவொன்றை கிழித்தெறியும்
ஆண்மை - பேடித்தமன்றோ ?
உலகில் வேறெந்த மிருகமும் கூட
செய்ய அஞ்சும் செயலன்றோ ??

தாயுமக்கு கொடுத்தது
தாய்ப்பாலோ - அன்றி
அகோரிகள் திருநீறோ ?
நாய்களின் சிறுநீரோ ??

இலங்கையில்
இலக்காகி - இறந்துபோகும்
எம் வீரத் தமிழச்சிகளின்
உயிரில்லா உடல்மீது
வன்புணரும் வக்கிர
மிருகங்களுக்கு - தூரத்து
உறவுகள் நீங்கலெனில்
துரத்த வேண்டாமா உங்களை,
நரகங்களுக்கு அப்பால் !

துக்கம் தெரிவித்து
கடமை முடிந்ததென
தூங்கப் போகும் - அரசியல்
வாதிகள் - எழாமல் சாகும்
விடியல் எப்போது விடியும் ?

பாதுகாப்பு ஏற்பாடுகள்
பலப்படுத்தப்பட்டது !
பலாத்காரம் செய்த
..........................களுக்கு !
காக்கி உடுப்புகளில்
வீதி வீதியாய் - காசுவாங்கும்
குற்ற யானைகளே...
உங்கள் மன"சாட்சி"களை
விசாரித்துவிட்டு - உயிரை
துடிக்கத் துடிக்கத் துண்டித்து
தூக்கியெறிய வேண்டாமா ?

உயிரோடு இருக்கையில்
மரணத்தின் மடியில்
இருக்க வைத்து - சிறிது
சிறிதாய் - உயிர்
சிதைக்க வேண்டும் !
அங்குலம் அங்குலமாய்
சிதைமூட்ட வேண்டும் !

அவன்கண் அகன்று பார்க்க
மறப்பு ஊசிகள் மறுத்துவிட்டு
ஒவ்வோர் அங்கமாய்
அறுத்தெடுத்து அவன்கை
கொடுத்தல் உத்தமம் !
தெருத்தெருவாய் - பெண்கறி
தேடும் - ஆண்குறி உட்பட !

எத்தனை கனவுகள்
எத்தனை வண்ணங்களில்
இருந்திருக்கும் - அப்பிஞ்சு பூவிற்கு ?
கையவர்களில் இதயமறுத்து
துடிப்படங்கும்முன்
பிணம் தின்னி கழுகளின்
உணவாக வேண்டும் !
உயிரோடு உலையேற வேண்டும் !

ஓ...கைதிகளே !
உங்களுள் சங்கமிக்கும்
மிருகங்கள் விரட்டி...
உங்கள் வெள்ளை
உடைகளை - சிவப்பாக்கி
கொள்ளுங்கள் - அவ்வாறு அவ்வாறை
கொல்லுங்கள் - குருதி தெறிக்க !

ஓ...கடவுளே !
இக்காமுகன்களின்
குறியறுத்தெறி - இல்லையேல்
புவியறுத்தெறி - பெண்டிர்
பெருமக்களுக்கு வெவ்வேறாய் !
வலிகாண வந்துபார் தெரியும் !
வன்புணர்தலின் வலிகண்ட
உடலெல்லாம் உயிரோடு எரியும்
என்பதுனக்கும் புரியும் !

இவ்விழியுலகில்
வெட்கப்படுவதை தவிர
வேறென்ன முடியுமென்னால் ???
நிராசையான - அவளின்
கடைசி ஆசை கண்டு,
"நான் வாழ விரும்புகிறேன் அம்மா" !

எழுதியவர் : வினோதன் (30-Dec-12, 5:41 am)
பார்வை : 276

மேலே