இந்திய தேசம்...

யுத்தமும், இரத்தமுமாய்
நிறைந்திருந்தாலும்
தேசம் சிறப்பாய்த்தான் இருந்தது
துரோகிகள் பிறக்கும் வரை..!

மன்னர் மணிமுடிகள்
தேசத்தை கோயிலாக்கி
அந்நிய தேசத்திடம்
அப்பாவியாய் மாட்டிக்கொண்டு
விடாப்பிடியாய் போரிட்டு
மாண்டுபோன பரிதாபம்...!!

கத்தியின்றி இரத்தமின்றி
கைக்கொண்ட சுதந்திரம்
சத்தமின்றி சுத்தமின்றி
சாகடிக்கும் நிலைமை...

”சாதிகள் இல்லையடி பாப்பா”
சான்றுரைத்த பாரதியையும்
பார்ப்பணன் என்று சொன்ன சமூகம்..!
கல்விக்கு வித்திட்ட கர்மவீரரையும்
காவு வாங்கிய சமூகம்...!

மாமன்னர்களும், மாவீரர்களும்
வள்ளல் பெருந்தகைகளும்
காகித ஏடுகளை காவல் செய்தனர்
காகத்திற்கும் கழுகிற்கும்
கழிப்பறையாய் நின்றனர்...!

கதிர்களெல்லாம் உதிர்ந்துபோக
பதர்கள் இங்கு பதவியில் ஏறின..
கிழக்கிந்திய நாகரீகத்தில்
இந்திய நாகரீகம் இறந்தே போனது...

கலாச்சார உடையிங்கு
கைக்குட்டையாய் சுருங்கியது
கதவுகளை சாத்திக்கொண்டு
காற்று வாங்கி களிப்படைகின்றனர்....

காளையர்களும், யுவதிகளும்
இணையம் வழியே
இச்சையை தீர்த்துக்கொண்டு
கொச்சையாய்ப் போகின்றனர்...

உணவு கொடுத்தவர்கள் வீதியிலும்
உண்டு கொழுத்தவர்கள் மாடியிலும்
புறம்போக்கு நிலமெல்லாம் புறம்போக்கிடம்
நடைமேடையெல்லாம் நலிந்தவர்களிடம்

ஒரு துளி மையை நம்பி
ஒற்றை விரலால் வாழ்வை
உள்ளூர் ஒற்றர்களுக்கே
அடமானம் வைத்த அப்பாவிகள்..!

தன்நிலை மறந்த தமிழரினமும் - இன்று
குருடாய், செவிடாய், ஊமையாய்
இவர்களின் சதையெல்லாம்
இங்கு வெறும் கதையாய்....

கதைக்குக் காரணமாவதற்கு முன்
தேசம் வளர்வதற்கு விதையாவோம்
கதிர்களாய் இருந்து விளைச்சல் தருவோம்
பதர்களை பயணத்திலேயே முறியடிப்போம்...!!

பிரியமுடன்
பிரேமி

எழுதியவர் : பிரேமி (3-Jan-13, 12:48 pm)
சேர்த்தது : Premi
பார்வை : 226

மேலே