கனவு
களைந்திடும் கனவினுள் கழித்திடும் கணங்கள்
களைத்த கண்களுக் களித்திடும் விருந்து – களையாய்
இளைத்த மனம்கொண்ட இளைஞனின் இலக்கை
இரையென இவள்கொண்டு புசித்திடும் பருந்து – இருந்தும்
முளைத்து மலர்ந்து முதிர்ந்த மனதின்
முதுமையை மறைத்துதனை மகிழ்விக்கும் மருந்து – மதியால்
வளர்ந்து விரிந்த விஞ்ஞான உலக
விந்தைகள் பலவுள் விளங்கிடும் சிறந்து – அதுவே கனவு.