சொர்க்கவாசலும் திறந்துவிடும்.....!

எங்கு நோக்கினும்
எழுதப்படாத கவிதைகள் !
எதிரொலிக்கும் பாடல்களால்
எதார்த்தமாய் எழும் கனவுகள் !

வருடம் ஒருமுறை
வசந்தமதை மொத்தமாய்
வாரித் தந்து கைக்கொள்ளும்
வண்ணமயத் திருவிழாவினில் ,

கோமகன் உன்னை
கொஞ்சம் தேடினேன்
கோலாகல வீதிகுள்ளே
கொஞ்சிக் கொண்டு நடித்தே !

ஒளிந்து நிற்பாயென
ஒருவித உள்ளூர உவகையோ
ஒருவாறு என்னை சீண்டிப் பார்க்க ,
ஒப்பனைகள் சரி செய்தே நகர்கிறேன் !

வளையல்கள் கூட
வரிகள் பதித்து வம்பிழுக்க
வலுக்கட்டாயமாய் மறைத்து ,
வாணம் ரசித்து சமாதானமானேன் !

முல்லை சூட்டலில்
முண்டிவரும் வாசமதை
மூச்சோடு விரைந்துணர்ந்து ,
முன் வந்துவிடு என் கள்வனே !

விழி மலர்களில்
வியக்கும்படியானதொரு
ஈரத் தன்மையுடனான வாசமதை
ஈட்டித் தந்தவனே உயிரை வருத்தாதே !

நாணம் இப்படியே
நச்சரித்துக் கொண்டிருக்க
நளினமுடன் என்னை நடத்தி
நல்மனம் எடுத்து நடைபோட்டபடி ,

காளிமாதேவியின்
கருவறை அடைந்தேன் ;
கன்னி என் வேண்டுதலை
கனிந்து ஏற்கும்படி தொழுதேன் !

சம்பிரதாயப்படி
சற்றமர்ந்த வேளையில்
சகல சௌபாக்கியங்களும்
சங்கமிக்கும் போக தருணத்தில் ,

அருகே வரும்
அன்பனின் மணமோ
அழகான கர்வமதின் வரவை
அடையாளம் காட்டச் சிவந்தேன் !

கவிழ்ந்த என்
கவின் தேடல்களை
ஆறுதலுடன் வருடுமவன்
ஆண்மையின் குறும்பினை ,

விவரிக்க நிறைந்து
விரும்பித் தோற்கிறேன்
எனக்கென்று பிறந்துவிட்ட
என்னவனுக்காகப் பலமுறை !

இனி விழாவீதி
இவளுக்கு மட்டுமே
சொந்தமாய் மாறிவிடும்
சொர்க்கவாசலும் திறந்துவிடும்...!

எழுதியவர் : புலமி (6-Jan-13, 3:34 pm)
பார்வை : 184

மேலே