தெற்கிலிருந்து வன்னிக்கு ஒரு பயணம் உல்லாசப் பயணிகளுடன்...! தமிழ்சுமந்த வீர மண்ணில் பார்க்கும் இடமெல்லாம் பேரினவாதத்தின் மொழிகள்... எம்முறவுகள் கருகிப்போன வீதிகளில் புலம்பெயர் உறவுகளும் சுற்றுலாப் பயணிகளாய் ...! உடலங்களைச் சுமந்து மறைக்கப்பட்ட புதைகுழிகளின் மேலால் தொடர் பேரூந்துகள் `அரைகுறை` ஆடைப் பயணிகளைச் சுமந்தபடி... புறமுதுகிட்டு ஓடாத எம் வீரமறவரின் இருப்பிடமறிய சாரை சாரையாய் வெறிபிடித்த துவேசிகள் கையில் புகைப்படக் கருவியுடன்...! `அவர் வாழ்ந்த வீடிது அவர் பாவித்த வாகனமிது பயன்படுத்திய பாசறையிது..` பார்த்தறிந்த பரவசத்தில் திறந்த வாய் மூடமறந்து தென்னிலங்கைப் பயணிகள் ... விடுதலைப் போரில் -தமை அர்ப்பணித்த வீரர்கூட பார்த்தறியாத ரகசிய நிலவறைகளும் சுரங்கப் பாதைகளும் இன்று சுற்றுலாத் தளமாய் ...!! ஒருபுறத்தே புதைக்கப்பட்ட தங்கம் தேடி சீருடைகளின் `தங்க`வேட்டை... மறைக்கப்பட்ட `பணம்` தேடி அங்குல அங்குலமாய் அகழ்வு வேட்டை.... மறுபுறத்தே ஆண்டுகள் சில சென்றாலும் முடிவுக்கு வராத ஆயுத வேட்டை ... எடுக்க எடுக்க குறையாத `அமுதசுரபி` போல.......! அமிலக் குண்டுகளில் சிதைந்துபோன எம்முறவுகளின் உயிர்க் காற்றை இழுத்து சுவாசித்தபடி அங்கொன்றும் இங்கொன்றுமாய் பச்சைச் சீருடைகள் ....! `அண்ணை எப்ப போவார் திண்ணை எப்ப காலியாகுமென` நீண்டநாள் காத்திருந்த சில தமிழ் பேசும் உறவுகளின் கட்டிலடங்கா அடாவடிகள் நில மீட்புக்காய் ......!! எம் வீரர்க்கு நிழல் கொடுத்த மரங்கள் வேரிழந்தும் விழுதிழந்தும் `இயற்கையின் பாதுகாவலர்களை` இழந்துவிட்ட சோகத்தில் இரத்தக் கண்ணீர் சிந்தியபடி..... ! வீரத் தமிழன் காலத்தில் சுதந்திரம் பெற்ற காற்றுகூட நம்முறவுகளின் உயிர்குடித்த சோகத்தில் நெட்டுயிர்த்துக் கொள்கிறது வீசமறந்து......! தெற்கிலிருந்து வன்னி நோக்கி ஒரு பயணம் சுற்றுலாப் பயணிகளைச் சுமந்தபடி ........!! ======================= தோழி துர்க்கா


வழி : தோழி துர்க்கா கருத்துகள் : 0 பார்வைகள் : 103
7
Close (X)
புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே