காட்சிப்பிழைகள்51 பொள்ளாச்சி அபி

வாலிபக் காலத்தின் நுனியில் காத்திருந்தேன்
வறண்ட நிலத்தின் ஏக்கமென பூத்திருந்தேன்

நீ வந்து போகும் பாதைதான் எனக்கு
நீர் மேகம் உலா வந்ததன் கணக்கு

நதியாய் ஒருநாள் வருவாய் நீயெனத் தெரியும்
விதியின் கரையில் தவமாய்த் தவத்தில் நானும்..

காதலெனும் சாரலையே தூவிவிட்டு போகச் சொன்னால்
சாதலெனும் பேரலையை வீசிவிட்டு போவதென்ன..

உறக்கம் கலைத்த கனவைப்போல மாறலாமோ..
கிறக்கம் கடந்து உயிரை நீயும் கேட்கலாமோ..

வர்ணமும் வாழ்க்கையும் வேறு வேறென்றா சொல்கிறாய்
திலகமும் நெற்றியும் ஒன்றாதல் அழகென்றால் மறுக்கிறாய்..

மாநீலக் கடலலைகள் அசைந்தாடும் கரையில்..
மாநில மதஎல்லைகள் ஒழிந்ததொரு வகையில்.,

அன்று கந்தனின் கையில் சல்மாவின் ரொட்டி
இன்று ரஜியாவின் வீட்டில் மாரியின் பெட்டி

மதங்கள் பிரித்த மனங்களின் அபஸ்வரங்கள்
கரங்கள் இணைந்ததால் பாடின சுபஸ்வரங்கள்

மேவிடும் இச்சைகள் பிரித்ததாய் இருந்த மனது
காவியும் பச்சையும் கலந்ததாய் வெள்ளை ஆனது

ராமனும்,அல்லாவும் நேற்று எதிரெதிரே கண்டனர்
வானும்,மண்ணும் போற்ற கைகுலுக்கிக் கொண்டனர்..!

இனி காதலுக்கென்றே கடவுளராக நாமும் மாறிடுவோம்..
கரும்பு வில்லை சுமந்தவருக்கு ஓய்வு கொடுத்திடுவோம்.!

இன்னும் உனக்கு தேவையில்லை முக்காடிட்ட மனம்
இணைந்தே நாமும் பாடுவோம் ஒரு சமத்துவ கானம்.!

-------பொள்ளாச்சி அபி.-30.01.2016

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (30-Jan-16, 12:33 am)
பார்வை : 276

மேலே