எண்ணம்
(Eluthu Ennam)
ஆழி
ஆதிகாலம் முதல்
பெண்கள் வடித்த
கண்ணீரே ஆழி!
உப்புநீரை
உழைப்பாளிகள்
உதிர்த்ததால்
உருவானதோ?
கண்ணீருக்கும்
உப்பு.
கடல் நீருக்கும்
உப்பு.
காரணம் இருவரும்
கன்னியரோ?
ஆழியே உன்
அலைகள் சொல்வதென்ன
கரையேற தொடர் முயற்சி
என்பதையா?
ஆழியே உன்
அடிமடியில் கிடப்பது என்ன?
ஆணிமுத்தா?
ஆழியே உன்
ஓரங்களில் இறைச்சல் எதற்கு
சில அரைகுறைகள்
அலம்பலை உணர்த்தவா?
ஆழியே உன்
அந்தப்புரத்தில்
அமைதி எதற்கு?
அறிவுடையோர் எப்படி
என்பதை அறிவுறுத்தவா?
ஆழியே நீயோ
வெறும் உப்பு நீர்
உணவுபொருள்
விளைகிறதே?
உயிரினங்கள்
உப்பில் போட்டால்
உயிர்விடும்-ஆனால்
உன்னில் உயிர்கள் எப்படி?
ஆழியே நீ
நெருப்பை அணைப்பாய்
என்று தெரியும்- ஆனால்
ஆதவன் மட்டும்
அணையாமல் எப்படி?
ஆழியே உன்
ரகசியம் என்ன?
உயிர் உள்ளவரை
உள்ளே வைத்துக் கொள்கிறாய்
உயிரற்றவற்றை
உமிழ்ந்து விடுகிறாய்?
ஆழியே உன்னை
கடைந்தால்
அமிர்தம் கிடைக்குமாமே
எது அமிர்தம்?
ஆழியே உன்னை
கடைந்தால்
ஆலகாலம் கிடைக்குமாமே
எது ஆலகாலம்?
ஆழியே உன்
ஆடை என்ன வண்ணம்
நீல நிறமோ?
ஆழியே உன்
முகம் பார்க்கும் கண்ணாடி
வானமோ?
ஆழியே உன்
நீண்ட கால்களில்
நீர்முத்து சலங்கைபூட்டி
நிலத்தில் நடக்கும் ஓசையோ
அலையோசை?
ஆழியே உன்னை
ஒன்று கேட்பேன்
உண்மையைச் சொல்!
குமரிக்கண்டத்தை
எங்கே ஒளித்து வைத்துள்ளாய்?
ஆழியே உண்மையை
சொல்?
ஆதிமனிதன் தோன்றியது
எங்கு?
ஆழியே உண்மை
சொல்
எமக்கு வியர்த்தால்
உப்பு நீர் வருகிறது
உனக்கு வியர்த்தால்
நல்ல நீர்?
ஆழியே உப்பு
சாப்பிட்டால் சூடு சுரணை
வரும் என்கிறார்கள்!
உன்னில் கழிவுகள்
கலந்தும் உனக்கு வரவில்லையே
எப்படி?
உலை பொங்கினால்
சோறு வெந்து விட்டது
என்று அர்த்தம்.
நீ பொங்கினால்
சுனாமி வந்ததென்று
அர்த்தமோ?
ஆழியே உனக்கும்
காற்றுக்கும் என்ன
தொடர்பு
அவன் கோபப்பட்டால்
உன்னை அள்ளிவந்து
புயலாய் அடிக்கிறான்!
ஆழியே
கப்பலை விட்டுவிட்டு
கட்டுமரங்களையே
சிதைக்கிறாய்
உனக்கும் ஏழைகள்
என்றால் இளக்காரமா?
புஷ்பா குமார்.