தைமகளே வருக...(பொங்கல் கவிதை போட்டி)
ஆடியில் பயிரிட்ட விதை நெல்லே
உழைத்த உழைப்பின் பயனாக
அறுவடை நெற்மணியாய் மலர்ந்திட
வழிப்பிறக்க தை மகளே நீ வருக !
பாவை நோன்பை முடித்த பின்னே
பூலாப்பூ வீட்டின் கூரையில் செருகப்
பழையன கழித்து, புதியன புகவிடும்
போகி கொண்ட தை மகளே நீ வருக !
நல்ல விளைச்சல் கொடுத்த நிலத்தையும்
மாறி மழை பெய்து பூமி செழிக்க
இயற்கை தலைவன் பகலவனை போற்றிட
சக்கரை பொங்கலிட தை மகளே நீ வருக !
தமிழனின் வீர சான்றாய் ஏறுத்தழுவல்
உழவனோடு உழவனாய் உழைத்த ஏறுக்கும்
பால் கொடுக்கும் பசுவிற்கும் நன்றி செலுத்தி
மாட்டு பொங்கலிட தை மகளே நீ வருக !
உரி அடியும் வழுக்கு மரம் ஏறலும்
உழைத்த களைப்பும் நீங்க உறவோடு
சுற்றமும் சேர்ந்தே மகிழ்ச்சியில் களித்திட
காணும் கொண்டாட தை மகளே நீ வருக !
தமிழோடு தமிழரின் வாழ்வு நிலைகளில்
இரண்டற கலந்த தமிழமுதே வருக !
தமிழ் பண்டிகையை அள்ளித்தந்து
மகிழ்ச்சி பொங்க தை மகளே நீ வருக !