பொங்கல் எனக்கில்லை

புத்தாண்டு எதுவென்று
இன்னும்
புரியாத தமிழ் சமூகம்
ஐயோ
பொங்கல் வைக்கத்தான்
புதுப்பானை தேடிடுதே.....

வாடிக்கை தலைவர்களின்
வாழ்த்துக்கள் கேட்டபடி
கேளிக்கை நிகழ்சிகளை
கைதட்டி ரசிக்கிறதே.....

போரிட்டு பார் வென்ற
என் பெருமைமிகு
தமிழ் இனமும்
தெருவில் நாய் போல
தள்ளாடி நடக்கிறதே
மதுவில் நா ஊறி
மல்லாந்து கிடக்கிறதே.....

விவசாயம் உருக்குலைந்து
பயிர்கள் கருக்கலைந்து
போனப் பின்னே
பாத்தும் பார்க்காதபடி
கண்மூடி என் சொந்தம்
கிரிக்கெட்டை ரசிக்கிறதே.....

தற்கொலைகள் தினம் செய்யும்
விவசாயிகள் நிலை கண்டு
பொங்கல் கொண்டாட
மனமில்லை அதனால்
வாழ்த்துச் சொல்வதற்கும்
விருப்பம் எனக்கில்லை ....

கரும்பொங்கல் என்றே நான்
கொடி ஏற்றி மகிழ்ந்திடுவேன்
கறுப்புக் கொடிக்கட்டி
கதிரவனை வரவேற்பேன்....

எழுதியவர் : ஹரிராஜா மாணிக்கவேல் (16-Jan-13, 11:34 am)
சேர்த்தது : raja.arp
பார்வை : 76

மேலே