மடித்து வைத்த காகிதம்
மடித்து வைத்த காகிதம்
மடித்து வைத்த காகிதம் -அது
மறைந்து போன காவியம்
பிரிந்து போன காதலில்-நான்
பிடுங்கி வைத்த ஞாபகம்
குடிசையிலே வாழ்ந்திருந்து
அரண்மனையில் ஆசை வைத்தேன்
குசேலனாய் நானிருக்க
குபேரனுக்கு போர் தொடுத்தேன்
சிறைபிடித்த என்வானில்
நிலவுமட்டும் ஒளிர்கிறது
நிலவினிலே கால் பதிக்க
எண்ணம் இன்னும் தவிக்கிறது
கையிரண்டில் விலங்கென்று
எழுந்து நிற்க எத்தனித்தேன்
எழுந்து நிற்க பார்க்கையிலே
பாதி மண்ணில் புதைந்து போனேன்
கோடியிலே புரண்டாலும்
கோதை மணம் மாறவில்லை
கோடி மீது துயின்றாலும்
உணர்வில் உறக்கமில்லை
வாடிப்போன ஞாபகங்கள்
வந்து என்னில் வாசம் வீசும்
கடந்து கொஞ்சம் போனாலும்
காலம்வந்து களைப்பூட்டும்
தேடித்தேடி ஓடிப்பார்த்தேன்
தென்படாத சோலைக்கிளி,
தேடாமல் கிடைத்ததின்று
மடித்து வைத்த காகிதமாய்
நான் பிடுங்கி வைத்த ஞாபகங்கள்
தனஞ்சன்