என் இதய வாசலின் ஏக்க குரல் !!!

என் இதய வாசலின் ஏக்க குரல் !!!

அன்பார்ந்த பெற்றோர்களே,வணக்கம்.தோல்விகள் தொடர்கதையல்ல..வெற்றிகள் பிறர்கதையல்ல..அனைத்தும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய ஒன்று.
நம் காந்திஜி தமிழ்ப்பள்ளி..இக்கிராமத்து தமிழ்ப்பள்ளி.இந்நாட்டில் எங்கேயும் இல்லாத சிறப்பு இப்பள்ளிக்கு உண்டு.பசுமை கொழிக்கும் ஊர்.பாய் விரித்தாற்போல் காட்சியளிக்கும் வயல்காடு.நல்ல நேயம் கொண்ட ஊர் பெரியவர்கள்.அன்பு உள்ளம் கொண்ட தாய்மார்கள்.சொன்னதை செய்யும் தந்தைமார்கள்.பணிவுமிக்க பள்ளி மாணவர்கள்.....
ஆகவே இப்பள்ளியின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள உங்கள் அனைவரையும் இவ்வழி சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
அன்று..........
இப்பள்ளியை ஊர் பெரியவர்கள் தூர நோக்கு சிந்தனையுடன் இம்மண்ணின் மைந்தர்களுக்காக,நாளைய சமுதாயம் நல்ல படிப்பறிவு உள்ள சமுதாயமாக இருக்க வேண்டி உலகத்திற்கே மகாத்மாவான அன்னல் காந்தியடிகளின் பெயரை சூட்டி மகிழ்ந்தனர்.
ஏதோ சிறு பிணக்கம் பள்ளியின் மேல் ஏற்பட்டு தங்கள் குழந்தைகளை மற்ற மொழி பள்ளியில் பயில செய்யும் நம் பெற்றோர்களை நோக்கி இருகரம் கூப்பி வேண்டிக்கொள்கிறேன்......!
இன்று.............
பள்ளியின் மேல் அதி அக்கறை கொண்டுள்ள பள்ளியின் தலைமையாசிரியர், அருமையான துடிப்புமிக்க,நேரங்காலம் பார்க்காமல் பல அற்புத நிகழ்ச்சிகளை படைத்த பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள்.இவர்கள்.இக்குறுகிய கால கட்டத்தில் மாணவர்களின் கல்வி மீது அக்கறை கொண்டு பல நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களுக்குள் இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தியவர்கள்..
பள்ளி அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வற்றாத ஆதரவு வழங்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர்.ஊர் பெரியவர்கள்,உடல் உழைப்பை வழங்கும் இளையோர்கள், சமுதாய தலைவர்கள்.அரசியல்வாதிகள்.கொடைநெஞ்சர்கள் இன்னும் எண்ணிலடங்கா நல்நெஞ்சர்கள்.
உங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்ப்பதற்கு இன்னும் என்ன தயக்கம்? நமக்கு நாமே எதிரியாகலாமா?வேற்று இன மாணவர்கள் நம் பள்ளியின் பக்கமே திரும்பமாட்டார்களே! நாம் மட்டும் ஏன்?சிந்தியுங்கள்.எதை எதையோ இழந்த நாம் இதையும் இழக்க வேண்டுமா?
அன்பார்ந்த பெற்றோர்களே......
பழையவற்றை பேசி காலம் கடத்தாமல் இன்றே முடிவு செய்யுங்கள்!புதிய வரலாற்றை இப்பள்ளி படைத்து வருகிறது.மலேசியாவில் உள்ள பிற மொழி பள்ளிகளுக்கு ஈடாக நம் பள்ளி சிறந்த பள்ளியென மலேசிய கல்வி அமைச்சால் தேர்வு செய்யப்பட்டு அதற்கான நற்சான்றிதழையும் நம் நாட்டின் துணை பிரதமர் வழங்கியுள்ளார்.
அன்பார்ந்த பெற்றோர்களே!
இன்னும் என்ன தயக்கம்!இங்கு நம்மை நாமே தொலைத்தால் வேறு எங்கு செல்வது!நம் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும்!நம்ப முடியாதா? அல்லது நம்மால் முடியாதா?நாம் நம்மை மட்டும் தொலக்கவில்லை. நம் கலை,கலாச்சாரம்,பண்பாடு,மொழி,அதற்கு மேலாக இனத்தையே இழப்போம்.மொழி அழிந்தால் இனமே அழியும் என்பது கண்கூடான காட்சியாகும்.எத்தனையோ நாடுகளில் தமிழர் என்ற அடையாளமே இல்லாமல் இருக்கின்றோம்.
இனியும்.............!
யாரும் இல்லை தடைபோட என்று சொல்லுவோம்!இப்பள்ளியின் மேல் கொண்டுள்ள நம்பிக்கையில் நடைபோடுவோம்! என்ன இல்லை இந்தப் பள்ளியில்! இன்னும் என்ன தயக்கம் இப்பள்ளியில் உங்கள் குழந்தைகளை,நாளய நம் இனத்தின் பெயரை சொல்பவர்களை சேர்த்திட !!!
சிந்தியுங்கள் ! சிந்தியுங்கள் ! சிந்தியுங்கள் ! சிந்தித்து செயல்படுங்கள்!

ஏக்கத்துடன்,

எழுதியவர் : தமிழ்தாசன் எம்.பி.எஸ்.கே க (8-Feb-13, 9:38 am)
சேர்த்தது : thamilthasan MPSK
பார்வை : 132

மேலே