மெல்லத் தமிழ் இனி மேன்மையுறும்...!

கடல்கோள் வந்து கவர்ந்து போனதே
கன்னித் தமிழின் கடல்நிகர் பொருட்கள்!
அடலே றென்ன ஆண்ட தமிழன்
அடிமை யென்றே தாழ்ந்து போனான்!
தடல்புட லாக ஆங்கிலம் கற்று
தாய்மொழி தன்னை மண்ணிற் புதைத்தான்!
உடல்பொருள் ஆவி நிகர்தமிழ் மொழிதான்
ஒப்பிலா இடத்தை எப்போ தடையும்?

தமிழா தமிழா ஏனிந்தத் தாழ்வு!
தவற விட்டாயே நல்லதோர் வாழ்வு!
அமிழ்தினும் இனிதே நம்தமிழ் மொழிதான்
அதனைப் பருகாது எட்டியை உண்டாய்!
இமிஅள வேனும் தமிழ்மேல் பற்று
இல்லாது ஒழிந்தால் எப்படி வளர்வாய்?
தமிழ்மேல் பற்று மீண்டும் கொண்டால்
தரணியில் மறுபடி மேருஎன வளர்வாய்!

‘காசி நகர்ப்புலவர் பேசும் உரையினைக்
காஞ்சியில் கேட்டிடக் கருவி செய்’யென
பேசிச் சென்றான் பெரியோன் பாரதி!
பெருமை கொள்ளும் செல்லிடப் பேசியும்;
நேசிக் கும்தொலைக் காட்சியும் கண்டோம்;
நேரலை வானொலி இணையமும் கண்டோம்!
ஆயினும் எல்லை மீறிப் பயன்படின்
அனைத்துப் பொருளையும் கண்டது வீணே!

அயற்பண் பாடு இங்கே வந்து
அழித்து விட்டதே தமிழ்ப்பண் பாட்டை!
இயம்புக நீவிர் இல்லறம் தானே
நல்லறம் அதனினும் நனிநன்று? எனின்
வியப்பாய்ப் போச்சே தமிழன் வாழ்க்கை!
விருப்புடன் திருமணம்; நாளையே மறுமணம்!
சுயஅடை யாளம் இல்லாது போனால்
சுடுசவத் திற்கு நிகரெனப் போவாய்!

கையுரை என்ற தமிழ்ச்சொல் தன்னைக்
காதால் நாமும் கேட்டது உண்டு!
கையூட் டென்ற கொடுந்தமிழ்ச் சொல்லைத்
தமிழ்மொழி ஏற்றது மாபெரும் வெட்கம்!
கையூட் டேற்கும் கொடியோன் தன்னை
நையப் புடைக்கும் சட்டம் ஒன்றை
ஐயம் இன்றி இயற்றிட வேண்டும்!
அதையே நாளும் போற்றிட வேண்டும்!


வளர்வாய் வளர்வாய் வான்போல் வளர்வாய்!
தமிழ்மொழி வளர்ந்தால் நீயும் வளர்வாய்!
களம்பல கண்டு சமர்பல வென்று
காவியம் படைத்தான் பாண்டிய மன்னன்!
இளமேரு தொட்டு சாதனை படைத்தான்;
இலங்கை மண்ணையும் வென்றே முடித்தான்;
இளவல் சேரன், சோழன் வழிதான்
இங்கே வந்தாய், நீயோ மறந்தாய்!

கடமை எதுவென எண்ணிச் செயல்படின்
கடுகள வேனும் ஐயம் இன்றி
மடமை தன்னை அகற்றி விடலாம்!
மாண்புடன் தமிழன் நிமிர்ந்து நிற்கலாம்!
முடவன் கூட முயற்சி செய்தால்
முழுத்தேன் அடையும் காலடி கிடக்கும்!
புடம்போட் டெடுத்த தங்கம் நம்தமிழ்!
புவியில் தமிழனாய்ப் பிறந்தாய் பெருமைகொள்!

முடியும் முடியும் எல்லாம் முடியும்!
முடியா எதுவும் தமிழால் முடியும்!
மடியும் தமிழைத் தூக்கி நிறுத்த
அறிவியல் தமிழை வளர்ப்போம் நன்றாய்!
இடியே விழினும் முடிவே இல்லை
கணனித் தமிழைக் காப்போம் அன்பாய்!
விடிவைக் காண விரும்பி நின்றால்
விழிப்போடு இருப்பாய்! வென்றே முடிப்பாய்!

எழுதியவர் : பேரா. பெ. சக்திவேல் (10-Feb-13, 8:40 pm)
பார்வை : 344

மேலே