என் கண்ணேஎங்கேடா நீயிருக்கே

காலங்கள் மாறுதடா.
காட்சிகள் மாறுதடா..
உருண்டோடும் உலகினிலே ..
புரண்டோடும் வாழ்க்கையடா..!

மேகத்து மழை நீர்தான்
மேனிதனில் உருண்டோடி
முத்தெனவே ஒன்றெடுத்து
உன்னில் முழு உலகைப்
பார்த்தேனடா !

தாகமென்று நீர் எதுவும்
தானமென்று பெற்றிடாமல்
பாகமென்று வாங்கி வந்து
பார்மேலே உனைத்
தவழவிட்டேன் !

பால்கறந்து பொங்க வைத்து
உனக்குத்தான்
பசியறிந்து பால் சோறு
பிசைந்து ஊட்டி உயிர் ஊட்டி

சீர் எதுவும் குன்றாமல்
'காய்' இது வென்று காட்டி
'கனி ' அதை உண்டுகாட்டி
என்னையே மொழியாக்கி
தவிப்புடனே ஆளாக்கி,

'சான்றோன்' என்று ஊரார்
போற்றும்போது
பெற்ற பொழுதிலும்
பெரிதுவந்த காலமது
அப்படியே ....இருந்திடாதோ ...!

உனக்கு ஒரு 'காதல் 'என்றாய்
உன்னுயிரே! அவள் என்றாய்
இல்லையேல் மரிப்பேன் என்றாய்
மனைவி ஆக்கி கூட்டி வந்தாய்.

உள்ளுக்குள் வலிக்குதடா
பெற்ற வயிறு எரிந்தாலும்
நான் பார்த்து உனக்கு
மணமுடிக்கும் முன்னே
நீ கொண்டால் என்ன ?
அவளும் என்மகள் தானே..!

காதல் சொல்லி உன் மனம்
என் காவல் தள்ளிப் போனதடா,

உனக்கொரு மகனும் வந்தான்
பிரிவென்னும் வேதனையில்லா
வாழ்த்துரைக்கும் என்மனம்
வாழையடி .... வாழை...என்று !

திண்ணையிலே நானுமின்று
தின்னவும் பிடிக்கவில்லை
திறனான நடையுமில்லை.

கண்ணில் நீருமில்லை,
கலங்குகிறேன்
இந்த அழுகை
பெரும் தொல்லை.

'காவல் 'தந்த தந்தையிப்ப
தள்ளாத வயதினிலே
அவர் நினைவும் என்மேலே
காப்பகமோ வேற,வேற

அடா...என் கண்ணே!...
எங்கேடா ..நீயுமிருக்கே
காலன் வரும் நேரமடா
காட்சி தந்து போவாயா......?

என்பயணம் முற்றும் நேரம்
உன் பயணம் தொடரட்டும்
சிறப்போடும் செழிப்போடும்

நீயேனும் உந்துணையுடனே!
மகனுடனே!..பின் பேரனுடனே!
சேர்ந்தே வாழ்ந்திருப்பாய்!

உன் நினைப்பினிலே
என்னுயிர் பிரியட்டும் ......!
கனவுலேயும் ...நீ
காப்பகத்தை நினையாதே.

என்னருமை
மகனே!...மகனே!.

எழுதியவர் : மின்கவி (22-Feb-13, 6:18 am)
பார்வை : 354

மேலே