நிழல்கள்
நான் யார்?
வெளிச்சத்தின் குழந்தை;
இருட்டுக்குத் தங்கை;
எனக்கு தாய் – நிஜப்பொருள்,
எப்போதும்
அவள் அருகிலேயே
சுற்றிவரும்
செல்லப்பிள்ளை நான்.
நான் வெளிச்சம்பொருத்து
திசை மாறுவதுண்டு,
தந்தையைக் கண்டால்
கொஞ்சம் பயம்,
அதனால்
அன்னை பின்னால்
ஒளிந்துகொள்வேன்.
இருட்டில் காணாமல் போவது- என்
அண்ணனோடு கண்ணாமூச்சி விளையாடல்,
தந்தையில்லாத போது.
ஆம்,
இரவாய் அவன் வளர்ந்ததும்
பெருமையால் உறவு முறித்து
பிரிந்துவிட்டான் – குடும்பம்விட்டு;
அன்றிலிருந்து அவனும் அப்பாவும்
இன்றளவும் எதிரணிகள்…
பின், நிலவோடு மணம்முடித்து,
இப்போது
விண்மீன்களின் தந்தை அவன்.
எப்போதும் ஒரே நிறம்தான் -
அளவுகள் கொஞ்சம் மாறினாலும்;
போலியாய் என்றுமே நடிப்பதில்லை,
என்னில் பிழையிருந்தால் – அது
என் பெற்றோரின் கட்டாயம்;
என் உண்மைத்தன்மைகள் இவைகள்தான்.
இப்போது நீங்களே சொல்லுங்கள்
நான் நிஜமா இல்லை நிழலா…