உடைபடாத பொழுது
உற்சாகக் காலைப்பொழுது
தடதடத்துக் கடக்கும்
அலுவலக ஆவல் நிறைந்த ரயில் பயணம்
ஒரு மதில் சுவரில்
தூக்கி வீசப்பட்ட முகக்கண்ணாடி
நொறுங்கியிருந்தது,
இவ்வளவு காலம் பழக்கப்பட்டதை
எவ்வளவு எளிதில் தூக்கி வீசினார்களென
மனம் சிந்தனையில் புதைந்தது
அந்தக் கண்ணாடி
எப்படி உடைந்திருக்குமென்று,
குழந்தை கையில் கொடுத்து விட்டு
சமையல் கட்டு பக்கம் அம்மா போயிருப்பாளோ?
நாள் பட்ட ஆணியில் மாட்டிய
நூலருந்து விழுந்திருக்குமோ?
வேலைக்குப் போகும் அவசரத்தில்
கொளுக்கியில் மாட்டாமல் அக்கா போயிருப்பாளோ?
கல்லூரிப்பேருந்துக் கட்டணம்கேட்டு
அண்ணன் எட்டி உதைத்திருப்பானோ?
பால் குடிக்க வந்த பூனை தட்டிவிட்டதோவென
நினைவுகள் வெவ்வேறு
கோணங்களில் ஓடின
அலுவலகம் போகும் வரை,
பணிமுடித்து திரும்புகையில்
அந்தக் கண்னாடிச் சட்டகத்தை
கழற்றிய படியிருந்தார் ஒருவர்,
உடைபட்டு போகிற
நம் ஒவ்வொரு பொழுதும்
உடைபடாத ஒரு புதுப் பொழுதை
கையில் தந்துவிட்டுதான்போகிறதென
ரயிலில் இருவர் பேசிக்கொண்டிருந்தது
அதெவ்வளவு பொருத்தமானதென்று
காதில் விழுந்தது
ரயிலின் சத்தத்தைக் கடந்து.