பெற்றோரின் வெற்றி
உன்ன பெத்தெடுத்து கையில்வச்சு கொஞ்சயில,
நாங்க உச்சி குளிர்ந்துபோனோம்;
அம்மா அப்பான்னு நீ முதல்தடவ சொல்லயில,
அப்பப்பா! சொல்லாத சுகம்கண்டோம்;
ஆறு வயசுல, ஒரு நோவு வந்து நீ துடிச்ச,
நோய குணமாக்கி, ஒருவழியா சரிசெஞ்சு
உன்ன மீட்டதும்தான், நாங்க உசிர்பெற்றோம்;
நல்லா படிச்சு, நீ பெரிய ஆளாய் வந்த,
நல்ல புள்ளன்னு ஊர் சொல்ல வளந்த,
கெட்ட பழக்கங்க கிட்ட ஏதும் அண்டாம,
சரியா உன்ன வளத்ததில பெருமபட்டோம்;
நீ ஒன்னுரெண்டு காதல்தோல்வி கண்டபின்னே,
உனக்கு புடிச்சமாதிரி ஒருத்திய கட்டிவச்சி, கண்குளிர்ந்தோம்;
புது சொந்தம் வந்தாலும், பழச மறக்காம
பாசமா பாத்துக்குற உன்னபத்தி, இப்போதும் மெச்சிக்கிட்டோம்;
இதெல்லாம் ஒன்னும் எங்களுக்கு பெருசுயில்ல,
“நான் பெருசானதும் உங்களையும் இப்படி நல்லா பாத்துக்குவேன்”
உன் பிள்ள உங்கிட்ட இப்படி சொல்லும்படி
உன்ன நாங்க வளத்திருந்தா – அதுதான்
உண்மையிலே உன்ன பெத்தவங்களுக்கு வெற்றி…