"ஊரோடு ஒத்து வாழாதே" !
![](https://eluthu.com/images/loading.gif)
கஞ்சிக்கு வழியின்றி
கெஞ்சும் ஏழையிடமும்
சொகுசை கொஞ்ச
பதவியெனும் - பஞ்சு
மெத்தையில் மிதந்தவாறு
கடமையை செய்ய
பல்லிளித்து கைநீட்டி
தலை சொறியும் - அரசு
தரித்திரங்கள் என்றொழியும் ?
அரசு மருத்துவ மனையில்
பிறந்த குழந்தை - தன்னை
பார்க்கவரும் எவரும் - சீருடை
அணிந்த மாமாவின் கைகளில்
அழுத்தும் காந்திகள் - அப்பிஞ்சு
பார்க்கும் - முதல் லஞ்சம் !
"தீண்டாமை ஒரு பெருங்குற்றம்"
என்ற வாசகம் தாங்கிய
புத்தகம் குடுத்து - ஆசிரியர்
தொடுக்கும் வினாவுக்கான
விடையளிக்க - சாதிச் சான்று
கொணர - சில காந்திகளை
அழுத்திவிட்டு காத்திருக்கும்
அப்பாவியாய் கிடக்கிறோம் !
கண்களுக்கு கவைகொடுத்து
விழிகளை விரட்டி - அரட்டி
படித்தவன் - பட்டியலில் கீழ்...
பணக்கார அப்பனுக்கு
மகனாய்ப் பிறந்தவன் - சமயங்களில்
மதிப்பெண் வாங்கும் மகானாய் !
எட்டுப்போட போகாமல்
உட்கார்ந்த இடத்திலிருந்து
சில நூறுகளைத் தூவி
ஓட்ட உரிமம் பெற்ற
பெருமக்கள் - ஓட்டி நடத்திய
விபத்தால் விழுந்தழிந்த
உடல்-உயிர்கள் எத்தனை ?
இலட்சியங்களும் - தேவையான
இலட்சணங்களும் மட்டுமே
கையிலேந்தி - கையூட்டு கொடுக்க
பணமின்றியும், மனமின்றியும்
மருகும் வாலிபனை - வேறொருவன்
லட்சங்களை லஞ்சமாய்
உருக்கி ஊற்றி அழிப்பது
எங்ஙனம் நியாயம் ?
அவனே - மனம் நொந்து
தற்கொலை செய்தாலும்...
அவன் உடலறுத்து
மூட்டை கட்டவும் - காசு
கேட்கிறீர்கள் - இரண்டாம் தர
மனசாட்சியை மாட்டிகொண்டு !
உண்மையை கொணர
சில ஆயிரமெனில் - பல
கொடுத்தால் - ஜோடித்த
பொய்கள் உருண்டு வரும் !
உள்ளது இல்லாததாகும்
இல்லாதது உள்ளதாகும்
வடிவேலு கிணறுகளாய்...!
செய்ய வேண்டிய வேலைக்கு
தினக்கூலியாய் - இரண்டாம்
சம்பளம் எதிர்பார்த்து
கையேந்தும் ஊழியர்களே...
வாயிற் கோபுரத்தின்
உதடுகளில் உட்கார்ந்து
அம்மாவென விளித்து
பிச்சை கேட்கும் எளியோர்
உம்மைவிட கேவலமா ?
உம்மோடு சரிசமமா ??
புரையோடிக் கிடக்கும்
கையூட்டு அழிப்போம் - எதிர்காலம்
கைவிட்டுப் போகும்முன் !
ஊர்கூடி தவறு செய்யின்
"ஊரோடு ஒத்து வாழாதே" !