“மொட்டைக் கடிதம்”(அகன் )

அவர்கள்
என்னைப் புரிந்து கொண்டதாய்
என்னுடன் பழகியவர்கள்!
ஊடுருவும் தேடலில்
அவர்கள் உள்ளத்திற்குள்
நான் ஒரு முறை

வரிசையாய் நின்று வாழ்த்தியவர்கள்
வார்த்தைகள்
என் சோதனைக் குழாய்க்குள்!
வினைத்தொகையாய் இல்லாமல்
வினையூக்கிகளாய்க் கோடிக் குறைகளை
அள்ளி அலசி
அக்குளில் அமுக்கி வைத்திருந்தனர்!

“சொல்லி இருந்தால் பேசி இருக்கலாம்
பேசி இருந்தால்-வழி யோசித்திருக்கலாம்!
நேர் வழிப் பயணம் இடர்மிக்கது!
வளைவு வழியும் வாழ்வை மேம்படுத்தும்!
நீயே திருந்திவா!”

சொன்னவர்கள் போனார்கள்
கசந்து கலைந்து
வசந்தம் நானில்லை இனி என்று
ஊதியணைத்தார்கள்
பாதிப் பயணத்தில்-ஒளி விளக்கை!

என்
மகிழ்வின் மாடங்களாய்
உவகையின் உப்பரிகைகளாய்
ஆனந்தத்தின் அம்பாரிகளாய்
உலா வந்தவர்கள்
காணாமல் போனார்கள்!

ஒற்றை நீர்க்கோடாய் நான்!
நிலப்பரப்பாய் அவர்கள்!
“தனிமரமாய்தான் இருப்பாய்-
தோப்பாக முடியாது உன்னால்
நேர்க்கோடு தொல்லையானது-
வளைவுகளின் வசீகரங்களில்
விலை போகாதோர் எவர் உளர்?
மாறிய கொள்கைகளால்
மாற்றிக்கொள் உன்னை!
வீம்பில் – விலகுவதும்!
விலக்குவதும் வீண்தான்!”

தோப்பாகவில்லை நான்.
தோட்டமாக முடியும்.
வாட்டமும் சோர்வும்
உண்மையாய் ஊறத்தான்
செய்தன என் பயணங்களில்!
பல்லிளித்துப் பரதம் ஆடிய
பள்ளங்களில் விளிம்புகளில்
தத்தளிக்க... மூழ்கிட...
மேடாய் இருந்த
ஓடு-ஒன்று தடுத்தது
வீரிய ஒளி தந்து
பள்ளத்தின் விளிம்பில்
நடை பழகிட நல்லொளி வீசியது!

ஓடு-ஒரு பெயர் சொல்-
நேர்மை!
வினைச்சொல்லாய்ச் சிலரிடம் மட்டுமே!

“நாராய்ப் பிறந்திருந்தால்
நறுமணமலர்கள் உன்னை
நலம் விசாரித்திருக்கும்!
ஏராய்ப் பிறந்திருந்தால்
அமிழ்வுகளில் விதைகள்
குமிழ்சிரிப்போடு நன்றி
உனக்குச் சொல்லியிருக்கும்!
காராய்க் கருவுற்றிருந்தால்
குளிர் மழையைப் பெற்ற
குவலயம் கும்பிட்டு இருக்கும்!
நேராய்க் கடமையாற்றியதால்
நேர்ந்தது துன்பமேயன்றி
பொட்டையாய் மொட்டைக் கடிதங்களில்
வட்டத்தின் சதுரமாகினாய் நீ
வேறு என்ன?

சயன சலனங்களில்
சத்தியம் தவறாதிருந்தாய் நீ
முரண்பாடகளும் எதிர்நீத்ச்சலும்
அரணாகிய கோட்டைக்குள் நீ!
எதிரொலிகளைத்தான்
கேட்டாய் நீ!
எதிராளியை என்ன செய்தாய்!

தொடர்ந்த என் பயணத்தில்
நானே திசைகள்
மின்மினி போல் வெளிச்சத்தில்
இருளை அழித்தேன்!
வாழ்க்கையின் அகராதி முழுதும்
வைராக்கியமெனும் ஒரே வார்த்தைதான்!

சின்னதாய் என்னுள் சீறிப் பாய்ந்தன
கவிதை வரிகள்

“கற்பனையையும் விற்பனையாக்கிட
ஒப்பனை போடாதவன் நீ!
கூரிய ஏழுதுகோல் எடு!
வீரிய வரிகளைத் தொடு!
எழுத்தைக் காதலி!
வார்த்தைகளை வசீகரி!
பயணம் தொடர்ந்திடு
படர்ந்த வீதியாய் நீயே!
ஒளிரும் வெளிச்சமாய் நீயே!

“எவரோடும் நீ
கவரோடும் எறும்பு போல்
கொண்டாய் இல்லை இணக்கம்!
நேசம் கொண்டாய் இல்லை!
முக்கியவர்கள், இறுதியாய்
தாக்கிடுவர் உன்னைத் – தாளில்!
மொட்டைக் கடிதமாய்!”
“மாடிக் கட்டிடமும் மடி நிறையப் பணமும்
லஞ்சமாய்தான் பெற்றான்!
பிறர் பெறவும் செய்தான்”
சந்ததியே சங்கடப்படும் சங்கதிகளை
வதந்திகளாய் விதைப்பர்!
நிம்மதி ஏது இனி?
வாய் நீளம் வதந்திக்கு அதிகம்
வயது குறைவுதான்.
தந்திபோல் மந்திபோல் தாவிடும்
மண்ணுக்கும் மரத்திற்கும்
என்ன செய்வாய்!”

நாளை வருமாம்
ஓலை எனக்கொன்று!
ஒருவேளை வேலையும் போகுமாம்
பயம் இல்லை எனக்கு
ஆமாம் எதற்கும் போடாதவன்
மாமா வேலை பார்க்காதவன்
பயத்தின் வலைக்குள் சிக்கமாட்டான்!

சந்தங்கள் சொந்தமாகிட
சரணங்களின் கரணங்களில்
கவிதை கைநீட்டி
என்னை அணைத்துக் கொண்டன.

“ஓடு” ஒரு பெயர்ச் சொல் இல்லை!
வினைச் சொல்லாய் என்னிடம்!
ஈறுகெட்ட எதிர்மறை அல்ல!
முற்றெச்சமில்லை!
போலியுமில்லை!
வினைச்சொல்தான்!
உருவம்-
நிழலும் நிஜமும்
சேர்ந்த கலவை!

என்னிடம் வெறும்
நிஜம் மட்டுமே.
நிழல் இல்லை!
அருபம் நான்
என்கின்றனர்!
வினைச்சொல்
பெற்றவன்
வினை புரிபவன்
அரூபமா?
அபூர்வமா?

“பைத்தியமாகிப் போனான்
வைத்தியம் பாருங்கள்”
என் மனைவிக்கே மொட்டைக் கடிதம்
போட்டார்கள்!

நானும், அவளும்
சிரித்துக் கொண்டோம்...!

எழுதியவர் : அகன் (21-Mar-13, 7:32 pm)
சேர்த்தது : agan
பார்வை : 134

மேலே