மனம் திறக்கிறேன் (கிராமத்து வாசனை)

மனம் திறக்கிறேன் (கிராமத்து வாசனை)

சலங்கை கட்டிய
மாட்டு வண்டிகளும்

கிராமத்து வாசலிலே
மொழுகிய சாணி வாசமும்,,,

ஐந்து பைசா
ஜவ்வு மிட்டாய்களும்,,,

அரக்க பறக்க நடந்து போய் காணும்
டூரிங் டாக்கீஸ் சினிமாக்களும்,,,

பள்ளிச்சீருடை பையில்
நிரம்பிக்கிடக்கும்
கோலி குண்டுகளும்,,,

உள்ளங்கையிலே கயிற்றால்
சுழற்றி சுற்றவைக்கும் பம்பரங்களும்,,

ஆலமர ஊஞ்சல்களும்,,,
ஆடித்திரிந்த வயல்வெளிகளும்

தொட்டாங்குச்சி வாத்தியங்களும்
சொடல மாடசாமி ஊர்வலமும்
திருவிழா கூத்துக்களும்,,,

மைக்கிலே மேடையேறி
பேசும் கிடா மீசைக்கார
ஊர் நாட்டாமையும்,,,

இரட்டைசடை
தாவணிப்பருவ பெண்களும்,,,

மூன்று ரூபாய் கிராப்பு
முடித்திருத்தல்களும்

பொக்கை வாய்க்கிழவியின்
வெற்றிலை இடிக்கும் சத்தங்களும்,,,

கிராமத்து திடல்
அய்யனார் கோயில்
கிடா வெட்டு சம்பவங்களும்,,,

கால் நொண்டியாடும்
பாண்டியாட்டங்களும் ,,,

நீச்சல் மேவுகளும் ,,

ஜனவரி ஒண்ணாம் தேதியின்
கூட்டாஞ்சோறு வாசங்களும்,,,,

பொய்க்கால் குதிரை
கரகாட்ட கோஷ்டியினரோடு
ஆடிய அலம்பல்களும் ,,,

அமுக்கிய பேருந்தில்
அடிபொடி செய்து அமர்ந்த
மைக்கா ஒட்டிய கதம்ப இருக்கைகளும்,,,,

நடத்துனர் விசிலை திருடியப்படி
ஓட்டுனர் நடத்துனராய்
வீதிவழி உலாவந்த
தென்னங்கீற்றினாலான
கயிறுகளும்,,,

நண்பனின் மண்டையைப்
பிளந்த மட்டைப் பந்துகளும் ,,,

ஆத்தாவின் அன்புக்கூவலின்
அரிசிச்சோறின் சுவையறியா
அவசரக்குடிக்கை வயதுச்செயல்களும்

அவ்வப்பொழுது அசந்த வேளையிலே
கருப்புவெள்ளை காலக்கட்டங்களின்
திரைப்படங்களாய் வந்து வந்து
போய்க்கொண்டு தான் இருக்கிறது

அனுசரன்,,,

எழுதியவர் : அனுசரன் (25-Mar-13, 1:49 pm)
பார்வை : 174

மேலே