அகல் விளக்கு
நான்
அகல் விளக்குதான்
ஆனாலும் ..
எனைக்கையிலேந்தி
கரைகண்டவர் பலருண்டு ..
சூரியனுக்கு துணையாக
சந்திரனுக்கு இணையாக
ஒளிகொடுக்கும்
பணியில் ....
சில காலம் நான் ..
என்னில்
சுடராய் எரியும் தீ
அணையும் வரை
சுட்டெரித்துக் கொண்டிருப்பேன்
இருளெனும் மாயையை ..
வாழ்விற்கு புது
வாசனை கொடுக்காவிடினும்
வாசற்படி நாடும் இருளை
இருக்கவிடாமல்
துரத்துகிறேன் ..
ஊர் உறங்கும் வேளையில்
நான் மட்டும்
கண்ணுக்குள் எண்ணெய் ஊற்றி
கண்ணிமையில் திரி ஏற்றி
விழித்துக்கொண்டிருக்கிறேன் .
என்னில் இருந்து
புறப்பட்ட ஒளிக்கதிர்களால்
உங்கள் முகங்களில்
பிரகாசம் காண்கிறேன் .
உங்களுக்காய்
ஓர் சூரியன்
ஒளிகொடுக்கும் வரையில் .....
என் வாழ்வு பற்றி
பற்றற்ற நிலையில்
பணியாற்றிக்கொண்டிருக்கிறேன் .
வெளிச்சம் ..
என் தலைக்கு மேல் ,
இருட்டு ...
என் காலடியில் ,
என் நிழல் தேடி
நானே தோற்றுப்போகிறேன் .