மூக்கணாங்கயிறு,,,,
மூக்கணாங்கயிறு,,,,
உன்னெழில் வரைந்த
தூரிகைக்கு முன்னால்
அடிபடும் என் பேனாமுனை
துலாபாரத்திலேற்றினாலும்
துவண்டுவிடுகிறது என்
பிடிவாதக்கவிதைகளில் சில
உன் மெல்லிடை அசைவிலே
சல்லடை போடுகிறேன்
என் வெள்ளைத்தாள்கள்
அள்ளி அணைத்துவிட
துளி வார்த்தைகள்
முளைத்துவிடாதாவென
நீ பார்க்கும் நொடி
உனக்குள்ளேயே நான்
கசக்கியெறியப்படுகிறேன்
திருத்தப்பட்ட பிழைகளாய்
உன் மூச்சுத்தொடும்
என் காலி இதயமும்
கவிதை பிறக்கின்ற
இடமாகிவிடுகிறது
உன் கண்கள் படா
என் கவிதைப்பக்கங்களும்
என் கல்லறைக் கல்வெட்டிலே
இறப்புச் சான்றிதழாகிவிடுகிறது
திறக்கப்படாத என்னிதழ்களின்
மெல்லியத் தாழ்ப்பாள்கள்
மெது மெதுவாய் திறக்கிறது
உன் வெட்கத்தை போக்கிவிட
தோற்றது யார் வென்றது யார்
என்றபடியே போகிறது
இங்கொரு பொய்வழக்கு
உனக்கும் எனக்குமாய்
விழுந்தும் பாதித்த நிலையில்
ஒரு வறட்டுப்பிடிவாதம்
செய்யுமென் குருட்டுத்தைரியம்
பார்வைப்பந்தலிலே
பழரசம் சுரக்கிறாய்
முந்தானை நுனியிலே
மூக்கணாங்கயிறு கட்டுகிறாய்
உன் மடியில் கட்டிப்போட்டு
முரட்டுக்கவிஞனாக்கிவிடவா
இத்தனையும் செய்கிறாய்,,,?
அனுசரன்