கிராபிக்ஸ் தேவதைகள்....
புழுதிப் பூச்சூடிய
லட்சுமி பாப்பாக்களும்..........
சாலையோர நாவல்
பழங்களில் தாவணி
முந்தானைகள் நிறைக்கும்
நாகம்மாக்களும்.....
கோழிச்சீக்கு குணமாக
மஞ்சள்காசு முடியும்
சுந்தரப் பாட்டியும்........
நெல்மணி சிறுக்கக்
கனாக் கண்டு அதிகாலை
வயலோடும் சீனித்தொரைகளும்....
தேவதைகளால்
தீண்டப்படும் கணங்களில்..
ஜன்னல்சிறை மழை
ரசிக்கும் ஸ்ரீக்களும்....
பின்னிரவு வழியனுப்பலின்
"நன்றி" தவிர்த்து
"மெஸ்ஸி" உதிர்த்து ஓடிக்
களைத்தமரும் வேதிஷாக்களும்...
ஓய்வூதிய முதல்வார
உபசரிப்பில் மட்டுமே
திளைக்கும்
கோதண்டராமன்களும்....
இணையத்தில்
தேடத் தொடங்கியிருக்கக்கூடும்
கிராபிக்ஸ் தேவதைகளை...