கருப்பு வெள்ளை!
கருப்பு வெள்ளை வண்ணங்கள்.
காணும் நிறங்களின் மூலங்கள்
இருளும் பகலும் காட்சிகள்..
இயற்கை அருளிய மாட்சிகள்..
கருப்புத் துடைக்க விலகுமே!
இருபுபு வெள்ளை ஒளிருமே !
கருப்புக்குள்ளே வெள்ளையும்.
காட்சி மறைந்து ஒளியுமே!
கருப்பு வெள்ளை சேராமல்
காணும் அழகும் புரியாது.
சேரும் மாசுப் படிவினால்
மாறி வெள்ளை கருக்குமே!.
வானவில்லின் மாயம் போல்!
வரைந்தார் மனித வர்ணங்கள்!
நிறங்கள் காட்டிப் பேதங்களை!!
நிறுவ முனைந்தார் மானுடர்கள்!
உழைப்பவன் வெய்யில் காய்ச்சலில்
உழைத்துக் கருத்தான் வயல்வெளியில்.
பிழைப்பவன் உண்டு பிறர் வலியில்
கொழுத்து வெளுத்தான் சுக நிழலில்.
வர்ணங்கள் இணைய நிறமழிந்து
வளரும் வெள்ளை அது போலே
வேற்றுமை தொலைத்த வெண்தாடி
வென்றார் நன்றே சமூக நீதி!
இன்பம் துன்பம் இரண்டுமே!
இருப்பதுதானே வாழ்க்கையே!.
இடையில் மாறும் மற்றெல்லாம்
ஏற்குஞ்சூழல் நிற மாற்றம்.
மெய்யை மறைக்கும் பொய்களும்,
இயல்பை மறைக்கும் நிறங்களும்,
என்றும் நன்றாய் நிலைக்காது!,
வென்றும் நின்றும் வாழாது!.
காலை விடிந்தால் வெள்ளைதான் !
மாலை முடிந்தால் கருப்புத்தான்!
கருப்பு வெள்ளை கணக்கிதுதான்!
காலம் கொடுத்த சமம் இதுதான்!
நிறத்தை மாற்றி வாழாதே!
நிசத்தை மறைக்க முயலாதே!
உனக்கென ஒன்று உள்ளிருக்கும்!
உணர்ந்தால் ஒளரும் உண்மைநிறம்!
சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா.