பதில் சொல் அம்மா!!

முற்றி தலைகுனியும் பயிர் நெல் அம்மா!
வற்றாத என் கேள்விக்கு பதில் சொல் அம்மா!

பக்குவமாய் விதை விதைந்து
நீர் பருகி வளர்ந்து நீவிர்
முற்றிய முதிர்ச்சி கண்டு சுற்றியுள்ளோர்
பெருமிதம் கொள்வார் அம்மா!

உனைப் போல் நானும் ஓர் உயிரம்மா!
பக்குவமாய் புவியில் விதைந்து வளர்ந்தேனம்மா!
வயது முற்றிய நிலைகண்டு சுற்றியுள்ளோர்
'முதிர்கன்னி '...என ஏளனம் செய்வது தகுமோ அம்மா?
ஏளனச் சொல் கடந்து மனம்
முற்றியவளாய் மணமாலை சூடி மணந்தும் இவ(ள்)
'இரண்டாம்தாரமா'வந்தவதா(ன்)...என பரிகசிப்பது சரியோ அம்மா?
எல்லோரும் சுற்றம் என எல்லாம் சகித்து வாழும் எனை
பிள்ளை இல்லா ' மலடி ' என இடித்துரைப்பது முறையோ அம்மா?

காற்றில் அசைந்தாடும் நெல் கதிர் அம்மா!
தலைகுனிந்தே தரணியை நிமிர்த்துகிறாயம்மா!
தலைகுனிந்து பண்புடன் நான் நடந்தாலும்
'முண்டச்சி(விதவை)' போறாப் பாரு... என நக்கலாய்க்
கொக்கரிப்பது ஏன் அம்மா?

'முதிர் கன்னி'...'இரண்டாம் தாரம்'...'மலடி'...'விதவை'....
அம்மம்மா...............பெண்ணுக்கு
எத்தனை இடி இழி சொல் அம்மா?
இத்தனைக்கும் விதிதான் பொறுப்பு என்றால்...
இடித்துரைப்போர் 'மா பாதக பாவியர்' ஆன விதியினர் தானே...!
மனிதரை மனிதர் மனம் நோக இடித்துரைப்பது சரி முறையோ...அம்மா...
முற்றி தலைகுனியும் பயிர் நெல் அம்மா!
வற்றாத என் கேள்விக்கு பதில் சொல் அம்மா!!

--- நாகினி

எழுதியவர் : நாகினி (8-May-13, 2:14 pm)
பார்வை : 111

மேலே