எழுதுகோலின் ஏக்கம் ! (வினோதன் )
நீலக் குடல் திரவம்
குடித்துவிட்டு - உலோக
நாக்குகளில் உலகம் பற்றி
நிறைய உதறுவோம்...
எண்ணங்களை - ஒடித்து
வளைத்து, நெளித்து
வண்ணங்கள் தீட்டி
சிலநேரம் திட்டி
சமயங்களில் பூட்டி
வெள்ளைத் தாள்களின்
வெளிறிய கால்களில் !
உலோக முனையால்
நாங்கள் தொடாத
உலக முனைகளில்லை !
எங்கள் நாக்கினால் பூமியின்
ஓட்டம் திருப்பி - அதன்
அழகையும், அழுகையும்
வரைந்து விட்டு - எழுந்து
போவோம், காரிருளுள் !
மொழித்தேன் குடித்து
மயக்கம் மங்காமல்
என்னைதொடுபவன்
விண்ணை தொடுகிறான் !
கற்பனையின் எல்லை
தொடங்குகிறான், தொன்றுதொட்டு !
பெரும்பாலும் பெண்களைப்
பற்றி பற்றி உளறுமென்னை,
பெண்ணாக மாற்றும் பெண்களும்
உண்டு - பெரும்பாலும் நான்
அவனோ, அவளோ அல்லாத
அதுவாகவே விரும்புகிறேன் !
தாளின் தளமும் - என்
தாளமும் ஆரத்தழுவி
முத்தமிட்டுக்கொள்கையில்
பிறக்கும் குழந்தைக்கு
கவியெனவும் பெயர் !
பேனாவாகிய நாங்கள்
கவிஞனின் பெருவிரல்
பிடித்து நடந்த காலங்கள்
காலனின் காலடியில்...
உம் விரல்களில் - விசைப்
பலகையின் மீதான காதல்,
சட்டைப் பையிலிருந்து - கண்டு
அழுத நாட்களில் - கசிகிறேன்
என்றெண்ணி தலைதுடைக்கிறாய் !
இது பிணவறை நோக்கி - எழுத்துபோன
எழுதுகோலின் ஏக்கம் !
பேனா மூடியின் பேரிருட்டுக்குள்
விழுந்த நிழல்கள் - எழுந்து
நடந்த போது - எடுத்தப் படம் !