ஹோலோகிராஃபி" (ஒளிப்பூதம்)

"ஹோலோகிராஃபி" (ஒளிப்பூதம்)

========================================ருத்ரா
தலைகீழாய் ஒரு பிஞ்சு மரம்
வாரிச்சுருட்டி எறியப்பட்டு இருக்கிறது
ஆகாயம் மண்ணில் பிசைந்து கிடந்தது.
இராட்சத ட்ராக்டர் மோதியதில்
அந்த புதிய ரகக் கார்
மண்டை பிளந்து நசுங்கிக்கிடந்தது.
சுற்றிலும் நாலைந்து பேர்
கையை கையை ஆட்டி பேசிக்கொண்டிருக்கிறார்கள்
அழுக்கு முண்டாசில் ஒருவன்
பீடி கடித்துக்கொண்டு
சொற்களை குதறித் துப்புகிறான்.
காக்காய் ஒன்று
மூக்கைக்கொண்டு கிள‌றிக்கொண்டிருக்கிற‌து
செத்த‌ எலியின் வ‌யிற்றிலிருந்து
நீள‌ நீளமாய் ஈர‌ல்க‌யிறுக‌ளை.
இத‌ன் ஊடே
ஒரு போலீஸ் கார‌ர்
சாக்பீஸ் வ‌ட்ட‌ம் போட்டுவிட்டு
நின்று கொண்டிருக்கிறார்.
துணிமூடிய‌ சேத‌மான உட‌ல்க‌ள் இர‌ண்டு.
ஒன்றின் சித‌றிய‌ த‌லை
துணியையும் மீறி சிவ‌ப்புப்பிழ‌ம்பை
க‌சிய‌ விட்டுக்கொண்டிருக்கிற‌து.
அத‌ன் "மெம‌ரி"உறுப்பு கூழாகிய‌து போலும்.
இன்னொன்று துணியின் வெளியே
கால் நீட்டிக்கிட‌ந்த‌து.
ஒரு பெண்ணின் அழகிய சிவந்த கால்.
கால்விரல்களில் செர்ரிப்பழ நிறத்து நகப்பூச்சு.
அதைச்சுற்றி
ஈக்கள் மொய்க்கத் தொடங்கி விட்டன,
ருசி தேடியா?முக‌ம் தேடியா?
அவை மொய்க்கின்ற‌ன‌?
சாமுத்ரிகா ல‌ட்ச‌ண‌ம் தெரிந்த‌ ஈக்க‌ளோ?
இருக்கும் இருக்கும்
க‌லியுக‌மும் க‌ணினியுக‌மும் சேர்ந்தே
முற்றிவிட்ட‌தே.
அவை "ஹேரி போட்ட‌ர்" ஆங்கில‌ப்ப‌ட‌த்தின்
எல‌க்ட்ரானிக் வ‌ண்டுக‌ள் போல்
ரீங்க‌ரிக்கின்ற‌ன‌...

ஒருவரின் அரைக்கால் உயிரைக் காப்பாற்ற‌
சைர‌ன் பூத‌ ஒலியுட‌ன் அர‌சாங்க‌ ஊர்தி அங்கே.
உறைந்து போன‌ ர‌த்தம்
அவர் முக‌த்தை அப்பியிருந்த‌து
"ஏலியன்" போல‌..
கொழ‌ கொழ‌ சில‌ந்திப்பூச்சியாய்...

"போதும் போதும்.
ஆஃப் ப‌ண்ணுடா.இதோ கெளம்பிட்டேன்.
மூக்குக்கு முன்னே இடிக்கும்ப‌டி
ஹோலோகிராஃபியை காட்டிய‌து போதும்."
ஃபார‌ன்சிக் ஆஃபீச‌ர்
வீட்டு சோஃபாவிலிருந்தே
க‌த்திக்கொண்டிருந்தார்.

கூவாம்ப‌டிக் கிராம‌த்து
காவ‌ல் அதிகாரிக்கும்
"விபத்து" பற்றி ஒரு விஞ்ஞான‌க்க‌ன‌வு.

===============================================

எழுதியவர் : ருத்ரா (12-Jun-13, 1:43 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 53

மேலே