எப்பொழுதும் மகிழ்வுற
எப்போதும்
மகிழ்ச்சியோடிருப்பது
எவருக்கும் சாத்தியம்.
மற்றவரோடு
எவ்வகையிலும்
உம்மை ஒப்பிடாதீர்.
இல்லாதது கணக்கெடுத்து
இருக்கும் மகிழ்வைத்
தொலைக்காதீர்.
எல்லாம் கொண்டவர்
எவருமில்லை.
எவரும் எதிலும்
பூரணமில்லை.
எதையும் அடைதலே
வெற்றியில்லை.
வெற்றியில் மட்டுமே
வாழ்க்கையில்லை.
கொடுத்தலும்
விட்டுக் கொடுத்தலும்
மகிழ்வைத் தருமென
மனமார நம்புங்கள்.
பொய்புரட்டாலும்
நேர்மை தவறியும்
வாங்கிக் குவித்தது
வங்கியில் இட்டது
எவருமறியாமல்
ஒளித்து வைத்தது
ஒருபோதும் உண்மை
மகிழ்வைத் தராது.
பொறுப்பைத் துறந்தும்
கடமை பிறழ்ந்தும்
காரியத்துக்காக
உறவு கொண்டும்
மற்றவர் பொருளைப்
பறித்துச் சேர்த்தும்
சிறக்காது வாழ்வு
சேர்ந்திடாது மகிழ்ச்சி.
என்னென்ன செய்தால்
மற்றவர் மெச்ச
முன்னுக்கு வரலாம்
என்பதில் கவனமும்
தன்னம்பிக்கை வளரத்
தகுந்த முயற்சியும்
திறமைகள் வளர்த்திடத்
தீரா வேட்கையும்
எவரையும் எள்ளா
உயர்குணமும்
உண்மை உழைப்பும்
உள்ளதில் நிறைவும்
பகிர்வில் மகிழ்வும்
பழகலில் இனிமையும்
மூத்தோர் வார்த்தை
மதித்து நடத்தலும்
கடமை செய்வதில்
கண்ணும் கருத்தும்
உறவுகளோடு
உண்மையாய்ப் பழகலும்
எவர் கொண்டாலும்
அவர்தம் வாழ்வில்
நிறைவும் மகிழ்வும்
குறையாது என்றும்.