பூத்து விட்டேன் என் குலம் காத்து விட்டேன்

வறுமை எமை

வாரியணைத்து,



கருவேலம் காட்டில்

வெறுங் காலோடு

விறகு பொறுக்கிய

தருணங்களில் ....



வெள்ளாடும் செம்மறியாடும்

வேல் கொம்புக் காளை மாடும்

கால் நோக மேய்த்த

தருணங்களில்....



கையிரண்டும் உரிந்து

கருஞ்சிவப்புக் குருதி கசிய

கரும்புச் சோவை உரித்துக்

கழனியில் திரிந்த

தருணங்களில்....



காலிரண்டும் ஓய

களி மண் மிதித்து

செங்கற்கள் செய்த

தருணங்களில்....



செம் மண் குழைத்துத்

தின் கல் உடைத்து

விண் முட்டும்

கட்டிடடங்கள் கட்டிய

தருணங்களில்....



விளைந்த கத்தரி

விடிகாலை சந்தை சேர்க்க

விரைந்து மிதி வண்டி

ஏறிப் பறந்த

தருணங்களில்....



என் வயதுப் பிள்ளைகள்

எழு நாளும் எழிலாக

தினம் நாலு விளையாட்டு

திரிந்தங்கு ஆடையிலே

ஏழைத் தந்தை பெற்ற

வாழைக் கன்று நான்

சிறு மனம் ஏங்க

பல கணம் நொந்தேன்....



சோறில்லை என்றாலும்

நம் போல் பிள்ளை

நாய் படும் பாடு

நாளும் பட வேண்டாம் என

கல்வித் தோள்

தந்து பெற்றோர்

கை தூக்கி விட்டனர்

இருண்ட எம் வாழ்வில்

ஒளி ஏற்றி விட்டனர்



கலைமகள் கரம் பிடித்தேன்

அனுதினம் அவள் அறம் படித்தேன்

கை விட்டது வறுமை

கட்டியணைத்தது பெருமை



கழனியில் கருஞ்சிவப்புக்

குருதி வடித்த போதும்

அவனியில் எனை

வெறும் பயல் என்றவர்களை

இவனுள்ளும் இத்தனை திறமைகளா

இவன் போல் என் பிள்ளை

இனிமேல் ஆவானா என

தினம் எண்ண வளர்த்தது கல்வி...



கல்விக் கதிர் பட்டு

கதிரவன் கரம் பட்ட

தாமரையாய்

பூத்து விட்டேன்

என் குலம்

காத்து விட்டேன்



அவனி கை விட்டு

அமிழ்ந்த யாவரையும்

அரணான கல்வி

அமிழ விடுவதில்லை

அதற்கு ஈடு எந்த

அமிர்தமும் இல்லை......

எழுதியவர் : நஞ்சப்பன் (12-Jul-13, 6:55 am)
பார்வை : 116

மேலே