பிதிர்வனமும் தனிமரமும்
சூனியத்தையே நிறைத்து
சூழலையும் உறையவைத்து
அசலங்களின் சாட்சிகளாய்
விசனமுகம் கவிழ்த்தாங்கு
ஆங்காங்கே நட்டுவைத்த
மூங்கிலுடன் கோங்குதரும்
பாங்கு இலா சோக நிழல்
தாங்கி நிற்கும் நிலமனைத்தும்.
எல்லாப் பொருளுமங்கு
இல்லை என்றாகிவிடும்
பொல்லாப்பும் பாவமும்
சொல்லாமல் அடங்கிவிடும்
செய்யாமலே செய்துவிடும்
செரிமானம் அதானாலே
புல்லருடன் புனிதருமே
செல்லரித்து மண்ணாவர்.
துர்மணம் தானெழுந்து
துளிர்விடும் அவ்வப்போது
கர்வமும் கனவுகளும்
காணாமல் செத்தொழியும்
போனவர்க்கு உதவாத
புதையலதை தேடுவோரும்
மாணவர் ஆகிடுவார்
மண்ணிதின் மகிமையினால்.
நிர்மல முகங்கொண்ட
இறக்கையுடை தேவதைகள்
வந்திடும் பிணங்களுக்கு
வந்தனம் கூறி்ச்சொல்லும்
“இன்றெமக்கு இது வீடு
இறந்தவர்க்கு புது வீடு
இன்னொரு நாளொன்றில்
நீ வருவது கண்கூடு”
இத்தனை அனித்தியமும்
மொத்தமாய் சூழ்ந்திருந்தும்
சத்தங்கள் அத்தனையும்
அத்தமனம் ஆகிவிட்டும்
அதிர்ந்தேதும் பேசாத
பிதிர்வனக் காப்பாளன்
தனிமரமாய் நின்றிருப்பான்
காசுகேட்டுத் தலைசொறிந்து.