விலைப் பெண்ணின் வாக்குமூலம்......
இயந்திர கதியில் ஒரு
இழிவான வாழ்க்கை .
வந்தனர் ஒரு நூறு உடைத்திறக்க
வரவில்லை ஒருவரும் உள்ளம் திறக்க !
வீணையும் நாங்களும் ஒன்றுதான்
மீட்டப்படுகையில் மட்டும் மதிக்கப்படுவதால் .
சாத்திய கதவுகளின் பின்
சமாதியாக்கப்பட்ட வாழ்வின் கனவுகள் .
கொண்டவள் நொந்தவள் என்பவள் என அறியாது
வந்தனர் தந்தனர் பெற்றனர் சென்றனர் .
வருத்தும் எங்கள் காயங்களின் வரலாறு
வருத்திய மனிதர்களின் மூர்கங்களின் வெளிப்பாடு .
அடிவயிறு வலிக்கப்பெற்று வந்த காசில்
சமைக்கப்பட்டது பிண்டங்கள் தான் எனினும்
தொண்டைக்குழி தாண்டுகையில்
இதயத்தின் ஏச்சுக்களை கேட்டபடிதான்
செரிக்கச்செல்கிறது மானமின்றி .
இவளால் இயலாது எனும்போது
காணலாம் இவளையே
வீதியில் குப்பையாய் .
இருட்டு எங்களுக்கு தேவைப்படுகிறது
மனத்தையும் முகத்தையும்
மீளாமல் புதைத்திட .
இறந்த கனமே எரித்திடுங்கள்
புதைத்து விடாதீர்கள்
ஏனெனில்
உடலால் ஊராரை சுமந்து
உள்ளத்தால் சோகம் சுமந்து
உயிரில் வலியை சுமந்து
சுமைதாங்கியாகவே வாழ்ந்துவிட்ட என்னுடல்
மண் சுமக்கவும் தயாரில்லை என்பதால் .