ஆசிரியர் தினம்
நன்றிப் பூக்கள்
எழுதுகோல் பிடிக்க
என் விரல்களுக்குச் சொல்லித்தந்து...
எழுத்துக்கள் படிக்க
என் இதழ்களுக்குச் சொல்லித்தந்து...
இயற்கையை ரசிக்க என்
இமைகளுக்குச் சொல்லித்தந்து..
இன்னலையும் ருசிக்க என்
இதயத்திற்குச் சொல்லித்தந்து...
உலகைப் புரிந்துகொள்ள என்
உள்ளத்திற்குச் சொல்லித்தந்து..
வாழ்க்கையை வகுத்துக்கொள்ள நல்
வழிகளைச் சொல்லித்தந்து..
எங்களுக்காக உருகும்
தங்க மெழுகுவர்த்திகளே!
என் வணக்கத்திற்குரிய
ஆசான்களே!
உம்மைப் புகழ என்
உதடுகளுக்கு மொழி தெரியவில்லை
என் விரல்களுக்கும்
எழுதத் தெரியவில்லை.
வெறும் கல்லாய்
வீதியில் கிடந்த என்னை
வகுப்பறைக்கு எடுத்துவந்து
சிறுகச் சிறுகத் தட்டி
சிற்பமாய் செதுக்கி
உலகறியச் செய்த
உன்னதப் படைப்பாளரே!
வாழ்க்கைக் கடலில் நான்
பயணப்படும்போது...
திசைதெரியாமல் தவித்தநேரம்
திசைகாட்டியாய்...
கரைதெரியாமல் கலங்கியநேரம்
கலங்கரை விளக்கமாய்
கைகொடுத்த தெய்வமே!
வெற்றியைப் பற்றிக்கொள்ள
வீறுநடை போட்டேன்
நீங்கள்
படிக்கற்களாய்...
ஏற்றம்பெறத் துணைசெய்யும்
ஏணியாய்...
அறியாமை இருள்நீக்கி
அறிவொளி நிரப்பும்
அழியாத ஆதவனே,
என் உள்ளத்தில்
அவ்வப்போது படிந்துவிட்ட
அழுக்குக் கறைகள்
உம்
வெள்ளொளி பட்டுத்தானே
வெண்மையாகிப் போனது!
நான்
தடுக்கி விழுந்த போதெல்லாம்
எழுப்பிவிட்டுத்
தட்டிக் கொடுத்து..
வழிதெரியாது என்
விழிகளில் மழைபொழிந்த போது
ஆறுதல் மொழிகூறி
அறிவுரை பல கூறி
ஆக்கமும் ஊக்கமும் அளித்து
அரவணைத்துக் கொண்ட
அன்னையே!
ஆம்
அனபுக்கு அன்னையாக
பண்புக்கு பிதாவாக
அறிவுக்குக் குருவாக
அருளுக்கு ஆண்டவராக
அத்தனை பரிமாணங்களிலும்
அழகாய்ப் பரிமளித்த
அற்புத ஆசானே!
என்னை அன்று
வகுப்பறையில் சிறிதுநேரம்
வருத்தப்பட வைத்தீர்
இன்று
வாழ்க்கை முழுக்க
வசந்தத்தில் வாழ வைத்தீர்!
என்னுயிர் ஆசான்களே
இதயத்தில் குடிகொண்ட
இணையற்ற தெய்வங்களே!
என் அன்பு முழுவதும்
உமக்கே அர்ப்பணம்
எனது சாதனைகள் ஒவ்வொன்றும்
உமக்கே சமர்ப்பணம்
உம்மை
இன்று மட்டுமல்ல
என் வாழ்வு முழுக்க
சிரித்துக் கொண்டிருக்கும்
ஒவ்வொரு கணமும்
சிந்தித்துப் பார்ப்பேன்
வெற்றிக்கனி பறிக்கும்
ஒவ்வொரு முறையும்
நன்றிப் பூக்களால்
மாலையிட்டு மகிழ்வேன்!