ஆத்தாவுக்கு கிடா வெட்டு ....!!
சிறிய நெற்றிதன்னில்
மஞ்சள் பூசி குங்குமப் பொட்டிட்டு
பூமாலை கழுத்தில் ஆட
மேனியெங்கும் நீறு பூசி
சிங்காரமாய் பவனி வந்தாய் ....!!
கம்பீரமாய் வளர்ந்திருந்தாய்
ஆத்தாளுக்கென்ற வேண்டுதலில் ...!!
ஆலயத்தில் பக்தர் கூட்டம்
அலைமோத ....
அலங்காரமாய் ..அழைத்து வரப்பட்டாய் நீ ...!!
ஊர்கூடி உனைப் பார்க்க
சன்னதி முன் நின்றனையே ...!
ஆர்ப்பரித்த கூட்டமும் அமைதி காத்தது....!
சுற்றும் முற்றும் பார்க்கிறாய் ...
மிரள மிரள
முழிக்கிறாய் ...
கட்டிய கயிறுருவி ஓடப் பார்க்கிறாய் ...
உன் குலுங்கலுக்காக
காத்திருக்கும் பக்தகோடிகள்...
சாமியாடி எதிரே கையில் அரிவாளுடன்...
நேரம்தான் போனது ..
எதற்கும் மசியாமல்
வேடிக்கை பார்க்கிறாய் ...
திருநீறு தூவியும்
குலுங்கவில்லை....
பொறுமை இழந்த பக்தரும்
ஆத்தா உனக்கென்ன குறை
என குறிகேட்டு கைகூப்பி நிற்க ....
அரை மணித்துளி காக்க விட்டாய் ...!!
சாமியாடி தீர்த்தம் எடுத்து
உடலில் தெளிக்க
தலை காது சிலுப்பி
உடல் முழுதும் குலுக்க ...
சம்மதம் கிடைத்ததாய்
அகம் மகிழ்ந்து
உன் பின்னங்கால்களை
ஒருவர் பிடிக்க
மற்றொருவர் கழுத்தை பிடிக்க ......
ஓங்கிய அரிவாளால் ஒரே போடு ....!!
ஆத்தாவுக்கு காணிக்கையாகிவிட்டாய் ...!!
துண்டானது தலை !
சிந்தியது ரத்த வெள்ளம்.....!!
சிலிர்த்தது பக்தர் உள்ளம் ......!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
