எங்கே எங்கள் சுதந்திரம்? ....
நல்ல தமிழிருக்க நம்முடைய சந்ததிக்கு
பொல்லாத ஆங்கிலத்தில் போதனையா? - மெல்லவே
சட்டம் படைத்து சகதியை சந்தனமாய்
இட்டுக்கொள் என்றால் இசைவதோ? - கட்டோடு
நம்மின் இனமே நசுக்கப் படும்போது
சும்மா இருந்தே சுயமிழந்தோம்! - இம்மண்
நதிகள் பொதுவில்லை நம்மில் பிளவு
எதிலும் இடைவரும் ஊழல் - சதியாளர்
எங்கும் வழிப்பறி ஏழ்மை அடக்குமுறை
மங்கும் மனிதம் மடமையிருள்! - தங்கு
தடையின்றி பெண்டிர் தரையில் உலவ
நடைமுறைச் சிக்கல்கள் நகற்ற - விடையில்லை!
எங்கே தொலைத்தோம் இனிய சுதந்திரம்?
எங்கே உளதோ எவரறிவார்? - இங்கே
சிரமத்தால் பெற்ற சுதந்திரம் தீயோர்
கரங்களில் சிக்கி கருகி - நிறம்மாறி
பண்பிழந்து பாதகர்கைப் பாவையாய் ஆனதால் .
கண்டுபின் மீட்டல் கடினமே! - மீண்டும்
திரும்பிடும் நாளே திருநாளாம் அந்நாள்
அரும்பிட உன்பணி ஆற்று!
வெ. நாதமணி.
20/08/2013.