நான் பயம் அறியேன் எழுந்து வா !!!!

ஏழையென பலரிருக்க
எட்டுமாடி வீடுகட்டி
எச்சிக்கையில் காக்காய் விரட்டி
எவர் துன்பத்தையும் உணராத
எல்லா கஞ்சர்களை அழையுங்கள்

திருவோடு கையோடு பலரிருக்க
திருந்தாத முண்டங்களாய்
திண்ணையில் அமர்ந்து கொண்டு
திருநாட்டின் புகழ் பாடும்
தீய்ந்த புண்ணாக்குகளை அழையுங்கள்

குலசாமி தெய்வமென்று
குடிபோதை கேட்குதென்று
குடிக்க காரணம் சொல்பவனை
குடுமியை பிடித்து அழையுங்கள்

பட்டினியில் பலர் வாட
பாடையில் இட்ட பிணமாய்
பலநேரம் கண் சிமிட்டாமல்
படம் பார்த்து பொழுது கழிப்போரை
பாரதி கண்ட பெண்களாவென
பளிச்சென்று அடித்து அழையுங்கள்

முந்தானைக்குள் ஒளிந்து
முடங்கிப் போன
மூடர்களை கொஞ்சம்
முதலில் அழையுங்கள்

காதல் பித்து பிடித்து
காம போதையில் அலைந்து
காலத்தை ஓட்டும்
கயவர்களை அழையுங்கள்

அன்னையிடம் பிள்ளைக்கே பாலில்லை
ஆண்டவன் இவனென்று
அபிசேகம் பாலால் செய்து
அட்டூழியங்கள் பல செய்யும்
அரக்கர்களை அழையுங்கள்

நாட்டில் வறுமையில் பலபேர்
நாயோடு உணவு பகிர்ந்துண்ண
நாங்கள் உமது ரசிகரென்று
நாடகக்காரர்களுக்கு பணம் கொட்டும்
நாடோடிகளையும் அழையுங்கள்

ஆடையின்றி இங்கு பலரிருக்க
அவிழ்த்து போட்டு ஆடி
ஆபாசம் பல காட்டும்
அனைத்து நடிகைகளையும் அழையுங்கள்

பொதுப்பிரச்சனை பேசுமிடத்தில்
பொழப்பத்தவர்கள் என்பவனை
பொழுதை போக்க செல்பவனை
பொடனியில் அடித்து அழையுங்கள்

விவசாயம் செய்வோரின்
விறகடுப்பு எறியவில்லை
விளையாட்டுக்கு கொண்டு சென்று
விரித்து பணம் கொட்டும்
விளம்பரக்காரர்களை அழையுங்கள்

கட்சியை நம்பி பயனேது
கருவறுக்கத் துணியும் நேரமிது
குறை சொல்ல நேரமில்லை
குடி அழியும் நேரமிது

வெட்டி பேச்சை விட்டுவிடு
செயலில் முதலில் இறங்கிவிடு
புரட்சி கண்டால் வாழ்ந்திடுவாய்
புரியாதிருந்தால் வீழ்ந்திடுவாய்

சீரழிந்த சமூகத்தை
சீரமைப்போம் வா தோழா!
எழுந்து வா
நான் பயம் அறியேன்!!!
சீரழிந்த சமூகத்தை
சீரமைப்போம் வா!!!!

எழுதியவர் : தா.நிஷா மெஹரின் (3-Sep-13, 6:43 pm)
பார்வை : 210

மேலே