கடவுளும் பூசாரியும்

சிலைக்கு
கோயில் கருவறை – அங்கே
அவிழ்க்கப்படுகிறது கன்னியின்
சேலை.

அமைதிக்கு
தியான மண்டபம் – அங்கே
மயானமாகிறது மங்கையின்
மானம்

அம்மனை பூஜிக்கிறான்
அம்மணத்தை நினைத்து
கையில் கற்பூர தீபம்-
நெஞ்சில் காம தீபம்

கொடுமை கொடுமையென்று
கோவிலுக்கு போனால்
பூசாரி ஆடுகிறான் –அங்கு
பாலியல் கொடுமையாட்டம்

சிந்திக்க மறந்த மனிதன்
சிலையை வணங்குகிறான்
பூசாரிக்கு வசப்படுகிறான்
மானத்தை இழக்கிறான்.

அண்டம் முழுவதும்
ஆளுகிறதாம் ஒர் சக்தி
அது கடவுளாம்
அந்த கடவுளுக்கு
பூசையாம் பூசிப்பவன்
அவன் பூசாரியாம்


--- ஏய் மானிடா !
உளி கொண்டு
செதுக்கிய சிலையை
பகுத்தறிவு எனும்
கடப்பாரையில்
சிதைத்துப்பார்
உடைவது
கடவுள் அல்ல !
கல் துகள்கள் -அந்த
கல்லை கையில் எடு !
சாமி
ஆசாமி யாகும்
பூசாரி
பொய்மையாவான்.

--------------------------------------இரா. சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (3-Sep-13, 8:44 pm)
பார்வை : 168

மேலே