அழகு யார் ......???

மண்ணில் மழைமுகில் திரண்டு வந்தால்
வண்ணத் தோகை விரிக்கும் கலாபமே ...!
எழில் கோலம் கொண்டு நீயாட
மையல் கொள்வாள் பெண் மயிலாள்....!!

சிரசில் செந்நிற கொண்டை இட்டு
கிழக்கு வெளுக்குமுன் கூவும் சேவலே ....!
சரசமாட உன் பெட்டை இனத்தை
விரசாக வரவழைக்கும் உபாயம் இதுவோ ....?

கிளையுடன் கூடிய கொம் பிரண்டை
தலையில் ஏந்திய கலை மானே ...!
ஆபத்து வேளை தன்னில் தற்காக்கவோ ...
உன் இணையான பிணையை வசீகரிக்கவோ ....?

மிடுக்கான தோற்றத்துடன் காடு வலம்வந்து
கம்பீரமாய் கர்ஜனை செய்யும் அரிமாவே ...!
பெண் சிங்கம் அதனைக் கவர்ந்திழுக்க
பிடரி மயிர் தனைச் சிலிர்த்தாயோ ....?

முறமனைய செவியாட துதிக்கையும் ஆட
பையபைய அசைந்து வரும் வேழமே ...!
யாரைக் கவர தந்தம் கொண்டனை ..?
யானை உன் பெண்துணையைத் தானோ ...?

ஐந்தறிவு உயிர்களில் ஆண் இனத்தை
அழகில் சிறப்பாய் வைத்தது ஏனோ....?
பெண்துணை கவர மட்டும் தானோ ...?
வேறேதும் சிறப்பு இதிலே உண்டோ .....?

மனிதருள் மட்டும் பெண்ணுள் அழகை
பொதிந்து வைத்து பெருமை சேர்த்தான் ..!
பிரமன் மகிழ்ந்து ரசித்துப் படைத்த
பெண்ணைப் பாடா கவிஞனும் உண்டோ ......???

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (13-Sep-13, 10:50 pm)
பார்வை : 111

மேலே