காதல் மணம் - கசந்ததே!

பேரழகே என்றெனையே
பெருமையாக புகழ்ந்ததுவும்,
பேசழகே என்றெனையே
வறுமையாக கெஞ்சியதும்,
வா அருகே என்றெனையே
வசந்தமாய் அழைத்ததையும்,
வாழ்வமைப்போம் என்றெனையே
வாழ்க்கையிலே இணைத்ததையும்-

நான் முழுதும் நம்பினேன்
நல்லநிலை வருமென்று...
நான் அன்று எண்ணவில்லை
காலநிலை மாறுமென்று!...

காதல்மணம் புரிந்திட்ட
காதலரின் நெஞ்சினிலே
காசு,பண ஆசையும்
கனிவாக நுழைந்ததுமே-
கல்யாணவேலி காட்டி
காசுபண நகை கேட்டார்
கல்லாத மொழிபேசி
கதவடைத்து கையுடைத்தார்.

உடலுருப்பு ஒவ்வொன்றாய்
உருமாறிப் போனாலும்,
உள்ளிருக்கும் என் உள்ளம்
ஊர்மாற உதவவில்லை.

எதிர்த்து வந்த வீட்டோடு
எதிர்பார்க்கும் செல்வத்தால்-
எதிர்கால வாழ்வுநிலை
புதிர்போல தெரிகிறது!

துன்பமென்னும் குழந்தைக்கு கண்ணீரால் பாலூட்டி,
வருகின்ற காலத்தை தூக்கம்வரும் தொட்டிலாக்கி,
புலம்பல்களை புனைந்து நான் புதுப் பாட்டு பாடுகின்றேன்!
புரியாத பிறரை எண்ணி பூரிப்பு அடைக்கின்றேன்!

எழுதியவர் : அருள் ராம் (27-Sep-13, 7:38 pm)
பார்வை : 69

மேலே