நீதி மன்றக் குயில்.

காக்காப்பூ மரத்தின்
காய்ந்ததொரு கிளையினிலே
பூக்காததொரு கரும்பூவாய்
குயிலொன்று உட்கார்ந்து
மட்டில்லா பிரபஞ்சமிதை
மனதுக்குள் அடக்கியதாய்
சட்டமது செய்துவரும்
சட்டித்தல் மந்திரத்தை
வெட்டுண்ட தன்னலகால்
வெறுப்புடனே பாடிடுமோ!

வாதவித்தை செய்தும்
வாயாமல் ஈதுவெறும்
தீதுவித்தை என்றேயது
ஓயாமல் புலம்பிடுமோ
வேண்டியே ஏறிக்கொண்ட
ஓடமதில் ஓட்டையினை
நோண்டிப் பாராமல்
நொந்தகதை சொல்லிடுமோ
தாமதித்த நியாயம்
தரப்படா நியாயமென்று
தன்னிலை தான்மறந்து
தேனிசையில் நவின்றிடுமோ

பூஞ்சிறகு இதயமுடன்
புல்லென்ற கட்டில்லா
விடுதலையைக் கொண்டதை
தாண்டிப் போகையிலே
சீட்டிக் குரலினிலே
சிருங்கலம் உடைத்துஅது
தீட்டிடும் கானமது
சர்வரோக நிவாரணியோ.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ். (3-Oct-13, 2:59 pm)
பார்வை : 92

மேலே